கோலார்: மாலுாரின் அப்பேனஹள்ளி கிராமத்தின் அருகில், மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்ததில், சென்னையை சேர்ந்த நான்கு நண்பர்கள் உயிரிழந்தனர். கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவின், அப்பேனஹள்ளி கிராமம் அருகில், பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் மேம்பாலம் மீது, நேற்று அதிகாலை 2:00 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி, மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த கோபி, 38, கவுதம் ரமேஷ், 28, ஹரிஹரன், 27, ஜெயங்கர், 30, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நால்வருமே தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர்கள்; பெங்களூரில் பணியாற்றினர். கவுதம் ரமேஷ், ஜெயங்கர், கோபி மென் பொறியாளர்களாக பணியாற்றினர். ஹரிஹரன் ராணுவத்தில் பணியில் இருந்தார். நண்பர்களான இவர்கள், நிகழ்ச்சி நிமித்தமாக சென்னைக்கு சென்றிருந்தனர். நிகழ்ச்சியை முடித்து, காரில் பெங்களூருக்கு திரும்பும் வழியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர். நால்வரில் ஒருவர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்திருந்தார். தகவலறிந்து வந்த மாலுார் போலீசார், நால்வரின் உடல்களையும் கிரேன் மூலமாக காரில் இருந்து வெளியே எடுத்தனர். கோலார் எஸ்.பி., நிகில் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.