பெங்களூரு : காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவர்களின் குடும்பத்தினர், சட்ட விரோதமாக கே.ஐ.ஏ.டி.பி.,யிடம் இருந்து, 5 ஏக்கர் நிலம் வாங்கியது தொடர்பான மனு மீதான தீர்ப்பை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், ஆக., 12க்கு ஒத்திவைத்தது. பெங்களூரு தேவனஹள்ளியில் 'விண்வெளி பூங்கா'வில் மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தினர் நிர்வகிக்கும் சித்தார்த்தா விஹாரா அறக்கட்டளைக்கு, கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான, ஐந்து ஏக்கரில் உள்ள 'சிஏ மனை' எனும் குடிமை வசதி மனையை, ஒதுக்கியது. இவ்விஷயம் கவர்னர் தாவர்சந்த் கெலாட் முன் சென்றது. இது தொடர்பாக, நிபுணர்கள் கருத்தை கேட்டிருந்தார். நிபுணர்களும், 'மனை கேட்கப்பட்டு, இரண்டே நாட்களில் ஒதுக்கப்பட்டு உள்ளது சந்தேகத்தை வரவழைத்து உள்ளது' என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்குள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், அறக்கட்டளையை நிர்வகித்து வரும் கார்கே மகன் ராகுல், நிலத்தை மீண்டும் கே.ஐ.ஏ.டி.பி.கே.,வுக்கே ஒப்படைத்தார். ஆனால், சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கியதாக கூறி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், மல்லிகார்ஜுன கார்கே, மனைவி ராதாபாய், மருமகன் ராதா கிருஷ்ணா, ராகுல், அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் மீது விஜயராகவ மராதே என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இரு தரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.