பல்கலையில் புகுந்து போராட்டம் ஏ.பி.வி.பி.,யின் 25 பேர் மீது வழக்கு
சர்ஜாபூர்: அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் புகுந்து போராட்டம் நடத்திய, ஏ.பி.வி.பி.., மாணவர் அமைப்பின் 25 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. பெங்களூரு ரூரல் சர்ஜாபூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில், 'ஸ்பார்க்' என்ற அமைப்பின் மூலம், மூன்று நாட்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது நாடக மேடைகளில், நமது ராணுவ வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கும் வகையிலும், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பதை வெளிப்படுத்தவும் திட்டமிட்டு இருந்ததாக, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த அவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் என்று எழுதப்பட்டு இருக்கும் பலகை மீது, கருப்பு மை பூசினர். இந்த நேரத்தில் ஒரு மாணவர் அமைப்பினர், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பின் 15 பேரை அங்கிருந்து அழைத்து சென்றனர். பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் அத்துமீறி புகுந்ததுடன், காவலாளிகள் ஜெகதீஷ், சந்தன், சத்தார், நரேஷ், ஸ்ரீபதி, ஹரிஷ், முதலாம் ஆண்டு பி.ஏ., மாணவர் முகமது அலி அகமதுவை தாக்கியதாக, ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பின் 25 பேர் மீது பல்கலைக்கழக பாதுகாப்பு தலைவர் வில்சன் அளித்த புகாரில், சர்ஜாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.