அதிக கட்டணம் வசூலித்த 2,988 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பாய்ந்தது வழக்கு
பெங்களூரு: அதிக கட்டணம் வசூல் மற்றும் பயணியரை ஏற்றிச் செல்ல மறுத்தது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், பெங்களூரில் 2,988 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மீட்டர் கட்டணம் வசூலிக்க மறுப்பு, கூடுதல் கட்டணம் வசூல், பயணியர் விரும்பும் இடத்திற்குச் செல்ல மறுப்பு ஆகியவை குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பொதுமக்கள் அளித்த புகார்கள், போக்குவரத்து காவல் துறையில் குவிந்தன. மீட்டர் மூலம், 50 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டிய பயணத்திற்கு, 100 முதல், 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், குறிப்பாக, மாலை நேரங்களில், ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் கேட்பதாக, தங்கள் புகாரில் பயணியர் கூறியிருந்தனர். அந்த புகார்களின் அடிப்படையில், மண்டல போக்குவரத்து அலுவலகமும், பெங்களூரு நகர காவல் துறையும் இணைந்து, கடந்த மூன்று மாதங்களில், 2,988 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக, 1,354 பேர் மீதும், பயணியர் விரும்பிய இடத்திற்கு செல்ல மறுத்ததாக 1,634 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.