| ADDED : நவ 28, 2025 05:34 AM
கலபுரகி: விபத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மஹாந்தேஷ் பீலகி மரணம் அடைந்த சம்பவத்தில், கார் டிரைவர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. கர்நாடக மாநில கனிம கழக நிர்வாக இயக்குநரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான மஹாந்தேஷ் பீலகி, 51, கடந்த 25ம் தேதி கலபுரகியின் ஜேவர்கி கோனள்ளி கிராஸ் பகுதியில் ஏற்பட்ட, கார் விபத்தில் சிக்கி தனது இரு சகோதரர்களுடன் உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய கார் மூன்று முறை பல்டி அடித்து கவிழ்ந்த போது ஏர்பேக் திறந்து உள்ளது. ஆனாலும் மூன்று பேர் இறந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், மஹாந்தேஷின் உறவினரான அனில் என்பவர் நேற்று முன்தினம் ஜேவர்கி போலீசில் அளித்த புகாரில், மஹாந்தேஷ் பீலகி, அவரது சகோதரர்கள் பயணம் செய்த காரை ஓட்டிய டிரைவர் ஆரோக்கிய அந்தோணி ராஜா, வேகமாகவும், கவனக்குறைவாகவும் காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். புகாரின்படி டிரைவர் மீது வழக்குப் பதிவானது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டிரைவரிடம் விசாரித்த போது, சாலையின் குறுக்கே திடீரென ஒருவர் பைக்கில் வந்ததால் அவர் மீது மோதாமல் தவிர்க்க, காரை திருப்பிய போது விபத்து நடந்தது என்று கூறி உள்ளார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நாய் குறுக்கே வந்ததால், காரை திருப்பிய போது விபத்து நடந்தது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.