பெண்களிடம் அநாகரிகம் மர்ம நபர் மீது வழக்கு
பெங்களூரு: டிஜிட் டல் கைது என்று மிரட்டி, இரண்டு பெண்களின் ஆடைகளை களைய வைத்து ரசித்த, மர்ம நபர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. பெங்களூரை சேர்ந்த 38 வயது பெண், தாய் லாந்து நாட்டில் ஆசிரியையாக உள்ளார். கடந்த 15ம் தேதி பெங்களூரு வந்த அந்த பெண் தனது தோழி வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 17ம் தேதி ஆசிரியையின் மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், மும்பை கொலாபா போலீஸ் நிலைய அதிகாரி என்று கூறினார். ஜெட் ஏர்வேஸ் நிறுவன பணமோசடியில் ஈடுபட்டதாக உங்கள் மீது புகார் வந்து உள்ளது என்று, ஆசிரியையிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, சமீபத்தில் தான் தோழி வீட்டிற்கு வந்ததாக கூறினார். அப்போது மர்மநபர், 'உங்களையும், தோழியையும் விசாரிக்க வேண்டி உள்ளது' என்று கூறி, வாட்ஸாப்பில் வீடியோ கால் செய்தார். ஆசிரியையும், அவரது தோழியையும் ஆடைகளை அவிழ்க்க கூறி, பார்த்து ரசித்தார். உங்களை டிஜிட்டல் கைது செய்யாமல் இருக்க, நான் கூறும் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்றார். பயந்து போன ஆசிரியை அந்த நபர் கூறிய, வங்கிக்கணக்கிற்கு 58,477 ரூபாய் அனுப்பினார். பின், அந்த நபரை ஆசிரியையால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மர்ம நபர் மீது ஆசிரியை, கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.