உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவக்கம் கர்நாடகாவில் முதல் நாளில் 12,000 பேர் பதிவு

 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவக்கம் கர்நாடகாவில் முதல் நாளில் 12,000 பேர் பதிவு

பெங்களூரு: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று முதல் துவங்கியது. கர்நாடகாவில் முதல் நாளிலேயே 12,000 பேர் ஆன்லைன் மூலம் தங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளனர். நம் நாட்டில் 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும் என்று, மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் மிருத்யுஞ்ஜய் குமார் நாராயண் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது. முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. se.census.gov.inஎன்ற இணைய முகவரிக்கு முதலில் செல்ல வேண்டும். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த பின் 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணை, மக்கள் தொகை கணக்கெடுப்போர், வீட்டிற்கு நேரில் வரும்போது அவர்களிடம் வழங்கினால் போதும். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 12,008 பேர், மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ஆன்லைன் மூலம் தங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளனர். கர்நாடக மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரான, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமசந்திரன், போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு சென்று, டி.ஜி.பி., சலீமை, ஆன்லைன் மூலம் தகவல்களை பதிவு செய்யும் நடைமுறையை செய்ய வைத்தார். இதுபோல தலைமை செயலர் ஷாலினிக்கும், ஆன்லைன் மூலம் தகவல் பதிவு செய்யும் நடைமுறையை முடித்து வைத்தார். இதுகுறித்து ஷாலினி கூறியதாவது: நமது மக்கள் தொகை கணக்கெடுப்பு - நமது வளர்ச்சி என்ற குறிக்கோளுடன், மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துகிறது. ஆன்லைன் மூலம் சுயபதிவு விபரத்தை பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த செயல்முறை எளிமையானது. பாதுகாப்பாகவும் உள்ளது. மொபைல் போன் பயன்படுத்தாதவர்கள், கணினி மையங்களில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய பணி. சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் போதுமான வள ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கிறது. இதில் இருந்து யாரும் விடுபடக் கூடாது. வெற்றிகரமாக நடத்த மத்திய அரசுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை