உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சக்ரேபைலு யானைகள் முகாம் 5 மாதங்களுக்கு பின் திறப்பு

 சக்ரேபைலு யானைகள் முகாம் 5 மாதங்களுக்கு பின் திறப்பு

ஷிவமொக்கா: ஷிவமொக்கா சக்ரேபைலு யானைகள் முகாம், ஐந்து மாதங்களுக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. குடகு மாவட்டத்தில் கடந்த ஏப்., 18ம் தேதி துபாரே யானைகள் முகாமில், இரு யானைகள் இடையே நடந்த மோதலில், தமிழகம், சென்னையை சேர்ந்த, பெண் சுற்றுலா பயணி உயிரிழந்தார். இதையடுத்து, அனைத்து யானைகள் முகாம்களையும் தற்காலிகமாக மூடும்படி, அப்போதைய வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே உத்தரவிட்டிருந்தார். அத்துடன், பல பாதுகாப்பு வழிகாட்டுதல்களை செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி, யானைகள் முகாமில் யானைகளுக்கும், சுற்றுலா பயணியருக்கும் இடையே, 25 அடிக்கும் அதிகமான இடைவெளி இருக்க வேண்டும். ஆற்றில் யானைகள் குளிப்பதை, தடுப்புக்கு பின்னால் இருந்தபடி மட்டுமே பார்க்க அனுமதி என விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த சக்ரேபைலு யானைகள் முகாம் நேற்று முதல் சுற்றுலா பயணியருக்காக திறக்கப்பட்டது. இதையறிந்து, பல பகுதிகளிலும் இருந்தும், 400க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இந்த முகாமில் 22 யானைகள் இருந்தாலும், 10 யானைகளை மட்டுமே சுற்றுலா பயணியர் பார்க்க முடிந்தது. அதேவேளையில், யானைகளுடன் செல்பி எடுக்கவும், யானைகள் குளிப்பதை அருகில் பார்ப்பதற்கு தடை விதித்து உள்ளதற்கு அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !