நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு நவ., 10ல் விசாரணை துவங்கும் என நீதிபதி அறிவிப்பு
பெங்களூரு: 'சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணை, வரும் 10ல் துவங்கும்' என, பெங்களூரு 64வது சிட்டி சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவரை நடிகர் தர்ஷன் உட்பட, 17 பேர் அடித்துக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு 64வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில், நீதிபதி நாயக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜாமினில் உள்ள 10 பேரும் ஆஜராகினர். இவர்களை பார்ப்பதற்காக, விசாரணை நீதிமன்றத்தில் வக்கீல்கள் கூடினர். நீதிபதி கோபம் இதை பார்த்த நீதிபதி நாயக், 'இத்தனை பேர் இங்கு கூடியிருந்தால், எப்படி குற்றச்சாட்டுகளை வாசிப்பது? இவ்வழக்கில் தொடர்பு இல்லாத வக்கீல்கள், வெளியே செல்லவும். இல்லையெனில் நீங்களே குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுங்கள்' என்றார். அப்போதும் அவர்கள் செல்லாததால், அங்கிருந்து ஏ.சி.பி., சிவானந்த் சலவதியிடம், 'குறைந்தது 20 பேரையாவது வெளியே அனுப்புங்கள்' என்றார். போலீசாரும், வழக்குக்கு சம்பந்தமில்லாத வக்கீல்களை வெளியேற்றினர். இதன்பின், குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரும் நீதிபதி முன் ஆஜராகினர். அப்போது நீதிபதி, ''ஏ 1 குற்றவாளி பவித்ரா கவுடாவுக்கு, ரேணுகாசாமி அனுப்பிய செய்தி தொடர்பாக, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவர் மீதும் சதி, சாட்சியங்களை அழித்தல், கொலை, சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. ''இந்த வழக்கில், ரேணுகாசாமியை, பவித்ரா செருப்பால் அடித்துள்ளார். ரேணுகாசாமி பேன்டை கழற்றி, அவரது மர்ம உறுப்பில் தர்ஷன் உதைத்துள்ளார். இதனால் அவர் மரணமடைந்தார். ஆனால், சிலருக்கு பணத்தாசை காண்பித்து, இக்கொலையை தாங்கள் தான் செய்ததாக, பொய் சொல்லும்படி வற்புறுத்தப்பட்டு உள்ளனர். குற்றத்தின்போது, மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படம், ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று உங்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது,'' என்றார். எதிர்கொள்ள தயார் அதற்கு 17 பேரும், 'எங்களுக்கும், இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்றனர். இதையடு த்து, ''நவ., 10ம் தேதி விசாரணை துவங்கும்,'' என, நீதிபதி தெரிவித்தார். விசாரணைக்கு பின், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட ஏழு பேரும் மீண்டும் பலத்த பாதுகாப்புடன், பரப் பனஅக்ரஹாரா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.