பெங்களூரில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு இனி.. கோழிக்கறி சாதம்!: . உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ஜி.பி.ஏ., திட்டம்
பெங்களூரு உட்பட நாட்டின் பல பகுதிகளில் தெரு நாய்களின் தாக்குதலுக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். விலங்கு ஆர்வலர்கள் தெரு நாய்கள் விஷயத்தில் அரசு தக்க முடிவெடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களும், பொது மக்களும், விலங்குகள் நல ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். மனுக்களை விசாரித்த நீதிமன்றமும், 'பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளி - கல்லுாரிகள், விடுதிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள், மைதானங்கள், அரங்க வளாகங்கள் உட்பட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரியும் தெரு நாய்களை பிடித்து, அதற்கான காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையமும், பெங்களூரு சென்ட்ரலில் கன்டோன்மென்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகம்; பெங்களூரு கிழக்கில் சாதமங்களா மற்றும் வர்த்துார்; பெங்களூரு மேற்கில் கொட்டிகெபாளையா; பெங்களூரு வடக்கில் அம்பேத்கர் நகர்; பெங்களூரு தெற்கில் பிங்கிபுரா ஆகிய ஐந்து மாநகராட்சிகளிலும் தெரு நாய்களை பராமரிப்பதற்கான இடங்களை தேர்வு செய்துள்ளன. 5 காப்பகங்கள் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் கூடுதல் தலைமை செயலரும், ஐந்து மாநகராட்சிகளிலும் காப்பகங்கள் கட்ட டெண்டர் அழைத்து, காப்பகங்களை பராமரிக்க தன்னார்வ அமைப்புகளுக்கு ஒப்பந்தம் வழங்கும்படி ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளார். இதற்கிடையில், தெரு நாய்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள், பொது மக்கள் ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன் ஜி.பி.ஏ., ஆலோசனை நடத்தியது. அதில், 'தெரு நாய்களுக்கு தினமும் அசைவ உணவு வழங்குவது என்று யோசனை கூறப்பட்டது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தனர். 50 ரூபாய் செலவு அதேவேளையில் பொது மக்கள், அசைவ உணவுகள் வழங்கினால் அவைகளின் மூர்க்கம் அதிகரிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தெரு நாய்களுக்கு காப்பகம் கட்டி, இரண்டு வேளை கோழிக்கறி சாதம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் நகரின் பல்வேறு நிறுவனங்கள், தங்கள் வளாகத்தில் உள்ள தெரு நாய்களின் விபரங்களை வழங்கும்படி, ஜி.பி.ஏ., அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, பெங்களூரு வடக்கில் 1,623, பெங்களூரு சென்ட்ரலில் 222, பெங்களூரு கிழக்கில் 193, பெங்களூரு தெற்கில் 131, பெங்களூரு மேற்கில் 37 என மொத்தம் 2,206 நாய்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. பெங்களூரு மாநகராட்சியாக இருந்தபோது, ஜூன் 17 நிலவரப்படி, ஒரு நாய்க்கு ஒரு வேளை உணவுக்கு 22.42 ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டது. ஜி.பி.ஏ., ஆக தரம் உயர்ந்த பின், ஒரு நாய்க்கு ஒரு வேளை உணவுக்கு 25 ரூபாய் வீதம் இரண்டு வேளைக்கு 50 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தெரு நாய்களை காப்பகங்களுக்கு மாற்றவும், பராமரிப்பு செலவை நிர்ணயிக்கவும், பெங்களூரு மத்திய மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரும், உணவு, ஊழியர்களின் சம்பளம், மருந்துகள், துப்புரவு பொருட்கள், நிர்வாக செலவு உட்பட மாதத்துக்கு ஒவ்வொரு நாய்க்கும், தலா 3,035 ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்து உள்ளது. உதாரணமாக வளாகங்களில் உள்ள 2,026 நாய்களுக்கு, தலா 3,035 ரூபாய் செலவழித்தால், மாதத்துக்கு 61.48 லட்சம் ரூபாயும்; ஆண்டுக்கு 7.37 கோடி ரூபாயும் செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தால், பராமரிப்பு செலவும் அதிகரிக்கும்.