விக்டோரியா மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு திடீர் வருகை தந்த முதல்வர் சித்தராமையா, நோயாளிகளின் பிரச்னைகளை கேட்டறிந்தார். அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார். முதல்வரின் திடீர் வருகையால், டாக்டர்கள், ஊழியர்கள் வெலவெலத்தனர். கொப்பால், ராய்ச்சூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதல்வர் சித்தராமையா நேற்று திட்டமிட்டிருந்தார். வானிலை மாற்றம் காரணமாக, அவரது சுற்றுப்பயணம் ரத்தானது. எனவே நேற்று மதியம் கே.ஆர்.மார்க்கெட் சாலையில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு, முதல்வர் திடீரென வருகை தந்தார். அவருடன் மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் உட்பட, உயர் அதிகாரிகள் இருந்தனர். மருத்துவமனை வார்டுகளுக்கு சென்று, நோயாளிகளின் பிரச்னைகளை கேட்டறிந்தார். அவர்களின் உறவினர்களிடம் பேசினார். அப்போது பெண்ணொருவர், தன் பிரச்னைகளை விவரித்தார். அவரை முதல்வர் சமாதானம் செய்தார். மருத்துவமனையில் சில குளறுபடிகள் இருப்பதை பார்த்த முதல்வர், மருத்துவ அதிகாரிகளை கண்டித்தார். அதன்பின் அங்கிருந்த அரசு அலுவலகங்களையும் பார்வையிட்டார். மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள், ஊழியர்கள் குறித்து, அதிகாரிகளுடன், முதல்வர் ஆய்வு நடத்தினார். பொதுவாக தன் நிகழ்ச்சிகள் ரத்தானால், முதல்வர் சித்தராமையா, காவிரி இல்லத்தில் அமர்ந்து, கோப்புகளை ஆய்வு செய்வார். ஆனால் முதன் முறையாக, மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தார். முதல்வர் எதிர்பாராமல் வந்ததால், டாக்டர்களும், ஊழியர்களும் பீதியடைந்தனர். அவரவர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், மாணவர் விடுதிகளுக்கு திடீர் வருகை தந்து ஆய்வு செய்யும்படி, அமைச்சர்களுக்கு பல முறை முதல்வர் உத்தரவிட்டார். ஆனால், அமைச்சர்கள் பொருட்படுத்தியதே இல்லை. லோக் ஆயுக்தா நீதிபதி, உப லோக் ஆயுக்தா நீதிபதி அவ்வப்போது, அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, ஆய்வு செய்கின்றனர்; அங்குள்ள அதிகாரிகளை கண்டிக்கின்றனர்.