உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆதரவாளர் கொடுத்த ராகவேந்திரர் படத்தை அவரிடமே திருப்பி கொடுத்த முதல்வர் சித்து

 ஆதரவாளர் கொடுத்த ராகவேந்திரர் படத்தை அவரிடமே திருப்பி கொடுத்த முதல்வர் சித்து

பெங்களூரு: தன் ஆதரவாளர் அன்பளிப்பாக வழங்கிய, ராகவேந்திர சுவாமி படத்தை, அவரிடமே திருப்பி கொடுத்த முதல்வர் சித்தராமையாவால் சர்ச்சை எழுந்து உள்ளது. முதல்வர் சித்தராமையாவின் காவிரி இல்லம் முன், நேற்று காலையில் அவரிடம் கோரிக்கை மனு கொடுக்க, ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் காத்திருந்தனர். முதல்வர் தன் இல்லத்தில் இருந்து காரில் வெளியே வந்த போது, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது, அவரது ஆதரவாளர் ஒருவர், அன்பளிப்பாக கொண்டு வந்த மந்த்ராலயா ராகவேந்திர சுவாமி படத்தை கொடுத்தார். அதை வாங்கி பார்த்த முதல்வர், உடனடியாக சுவாமி படத்தை, அவரிடமே திரும்ப கொடுத்து விட்டு, அவரை கோபத்துடன் முறைத்து பார்த்தார். இதே வேளையில், வேறு ஒருவர் அளித்த சாணக்கியன் தொடர்பான புத்தகத்தை, முதல்வர் பெற்றுக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடவுள் படத்தை முதல்வர் வாங்க மறுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. முதல்வரின் செயலை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது: முதல்வர் சித்தராமையாவுக்கு, ஹிந்து கடவுள்களை கண்டால் ஆகாது. திலகம், நாமம் மற்றும் கிருஷ்ணரை கண்டால் பிடிக்காது. அவருக்கு தொப்பியை கண்டால் மட்டுமே குஷியாக இருக்கும். திப்பு ஜெயந்தி கொண்டாடினார்; கலவரம் நடந்தது. கோகிலு லே - அவுட்டில் முஸ்லிம்களுக்கு வீடுகள் கொடுத்தார். ஹிந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரும்பான்மையினரான ஹிந்துக்கள், முதல்வர் சித்தராமையாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் இத்தகைய மனப்போக்கை தொடர்வார். அன்போடு யார் என்ன கொடுத்தாலும், அதை பெற்றுக்கொள்வது நல்ல பண்பாடு. அந்த அன்புக்கும், உணர்வுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பது தான், மக்கள் பிரதிநிதிகளின் கடமை. ஜாதி, மதம் எதுவாக இருந்தாலும், அவர்களின் உணர்வை கவுரவிக்க வேண்டும். சித்தராமையா போன்ற தலைவரிடம், இத்தகைய செயலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை