குழந்தை நட்சத்திரம் நிதிஷாவுக்கு ஊதியம் தராமல் மோசடி
பெங்களூரு: கன்னட தொலைக்காட்சி சேனல் ஒன்றில், 'லட்சுமி நிவாசா' என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் குழந்தை நட்சத்திரம் நிஷிதா நடித்து வருகிறார். இதே தொடர், தெலுங்கில் 'லட்சுமி நிவாசம்' என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதிலும் இவரே நடித்து வந்தார். தெலுங்கு தொடர் குழுவினர், சில மாதங்களாக இவருக்கு ஊதியம் வழங்கவில்லை. இவரை திடீரென தொடரில் இருந்து நீக்கிவிட்டு, வேறு குழந்தை நட்சத்திரத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நிதிஷாவின் தாய் பிரியா கூறியதாவது: தெலுங்கு தொடரில் என் மகள் கஷ்டப்பட்டு நடித்தார். நள்ளிரவு வரை ஷூட்டிங் இருந்தாலும் பங்கேற்றார். ஷூட்டிங்குக்கு வர வாகன வசதியும் செய்து தரவில்லை. படப்பிடிப்பின்போது, ஒரு முறை மின்சாரம் தாக்கியது. பல முறை உடல் ஆரோக்கியம் சரியில்லாத நிலையிலும், தவறாமல் நடித்து கொடுத்தார். நடப்பாண்டு ஏப்ரல் முதல், அவருக்கு ஊதியம் தராமல் நடிக்க வைத்தனர். ஊதியம் தரவில்லை என்றாலும், படப்பிடிப்புக்கு சென்றார். ஆனால் இவருக்கு, 'லட்சுமி நிவாசம்' தொடர் தயாரிப்பாளர் பிரசாந்தி, ஊதியம் வழங்காததுடன், தொடரில் இருந்தே நிதிஷாவை நீக்கிவிட்டு, இவரது இடத்துக்கு மற்றொரு குழந்தை நட்சத்திரத்தை சேர்த்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.