40 நாளில் சாலை பள்ளங்களை மூட வேண்டும் ஜி.பி.ஏ., அதிகாரிகளுக்கு முதல்வர் கெடு
பெங்களூரு : ''பெங்களூரில் 40 நாட்களுக்குள் சாலை பள்ளங்களை மூட, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று, ஜி.பி.ஏ., அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார். பெங்களூரு நக ரின் சாலை பள்ளம், அரசுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்து உள்ளது. தொழில் அதிபர்கள், ஐ.டி., நிறுவனங்களை சேர்ந்தவர்கள், அரசை விமர்சிக்கின்றனர். சாலை பள்ளங்களை மூடுவது தொடர்பாக, பெங்களூரு காவேரி இல்லத்தில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகளுடன், முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: பெங்களூரில் சாலை பள்ளங்களை மூடுவதற்கு மெட்ரோ, ஜி.பி.ஏ., குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், பெஸ்காம், பி.டி.ஏ., இடையில் ஒருங்கிணைப்பு அவசியம். ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் வாரத்திற்கு ஒரு முறை, அனைத்து துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். சாலை பள்ளத்தால் மக்கள் அன்றாடம் படும் கஷ்டம் உங்களுக்கு தெரியவில்லையா. அவசர நடவடிக்கை எடுக்காதது ஏன். மழை காலம் துவங்குவதற்கு முன்பு, பள்ளங்களை மூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை பள்ளத்தை மூட கடுமையான நடவடிக்கை எடுங்கள். கான்ட்ராக்டர்களுடன் கூட்டு சேராமல், சாலை பள்ளங்களை மூட ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்துங்கள். பள்ளங்களை மூடுவதில் உங்களுக்கு என்ன கஷ்டம். அரசுக்கு ஏன் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறீர்கள். சஸ்பெண்ட் பணியில் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை, சஸ்பெண்ட் செய்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இனியும் பள்ளங்களை மூடாவிட்டால், தலைமை இன்ஜினியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர். யாரையும் விட மாட்டேன். பணப்பற்றாக்குறை இருந்தால் எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நிதி விடுவிக்க முயற்சி எடுப்போம். புதிய தொழில்நுட்பமான, 'ஜெட்பேட்சர்' மூலம், மழைக்காலத்திலும் பள்ளங்களை மூட முடியும். அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முயற்சி எடுங்கள். இவ்வாறு அவர் பேசினார். ஆலோசனை சித்தராமையா நேற்று காலையில் அளித்த பேட்டி: பெங்களூரில் சாலை பள்ளங்களை அக்டோபர் 31ம் தேதிக்குள், அதாவது 40 நாட்களில் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜி.பி.ஏ., அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து உள்ளேன். ஒரு மாதத்திற்குள் பள்ளங்களை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர். தொழில் அதிபர்கள், ஐ.டி., நிறுவனத்தினர் சாலை பள்ளம் விஷயத்தில் எந்த விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை. அவர்களிடமும் பேசுவோம். நகரில் 1.40 கோடி மக்கள் வசிக்கின்றனர். சாலை பள்ளத்தால் யாரும் சிரமப்பட கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். ஜி.பி.ஏ., அதிகாரிகளுடன் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை ஆலோசனை நடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார். சுதந்திரம் துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''பெங்களூரில் சாலை பள்ளத்தை மூட, அரசு ஏற்கனவே 1,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. கூடுதலாக 750 கோடி ரூபாய் நிதி தருவதாக முதல்வர் உறுதி அளித்து உள்ளார். பொதுமக்கள் பள்ளங்கள் பற்றி, அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். ''மழைக்காலம் முடிந்த பின், பள்ளங்களை மூட தனி திட்டம் வகுக்கப்படும். நாட்டின் அனைத்து நகரங்களிலும் பள்ளங்கள் உள்ளன. ஆனால் பெங்களூரில் உள்ள சாலை பள்ளங்களை மட்டுமே, ஊடகங்கள் வெளியிடுகின்றன. மற்ற மாநிலங்களில் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. கர்நாடகாவில் நாங்கள் முழு சுதந்திரம் கொடுத்து உள்ளோம்,'' என்றார். பெங்களூரில் சாலை பள்ளத்தை 15 நாட்களில் மூட வேண்டும் என்று, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, அதிகாரிகளுக்கு, சிவகுமார் உத்தரவிட்டார். அவர் உத்தரவிட்டு ஒரு ஆண்டு ஆகியும், இன்னும் சாலை பள்ளங்கள் மூடவில்லை. தற்போது முதல்வர் 40 நாட்கள் கெடு கொடுத்து உள்ளார். இவரது பேச்சையாவது அதிகாரிகள் கேட்பரா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.