பிரதமரை சந்தித்து ஆலோசனை முதல்வர் சிவகுமார் திடீர் முடிவு
மைசூரு: ''கரும்பு விவசாயிகள் எதிர் கொண்டுள்ள பிரச்னைகள் மற்றும் கர்நாடகாவின் வறட்சி சூழ்நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்துவேன்,'' என முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். மைசூரில் நேற்று முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி: கரும்பு விவசாயிகளின் பிரச்னைகள், மாநிலத்தின் வறட்சி சூழ்நிலை குறித்து, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தி, தீர்வு காணப்படும். இதற்காக பிரதமரை சந்திக்க, நேரம் ஒதுக்கி தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளோம். அனைத்து கட்சிகள் குழுவை அழைத்து செல்வது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படும். இதற்கு முன் அனைத்து கட்சிகள் குழுவில், தாங்களும் பங்கேற்பதாக கூறினர். இப்போதும் அவர்கள் குழுவுடன் வருவர் என, நம்புகிறேன். பிரதமர் நேரம் ஒதுக்கி கொடுத்தவுடன், டில்லிக்கு செல்வோம். கரும்பு விவசாயிகள் பேச்சு நடத்தி, தங்களின் பிரச்னைகளை சரி செய்து கொள்ள வேண்டும். போராட்டத்தை நிறுத்த வேண்டும். இது குறித்து விவசாயிகளுடன் பேசினேன். போராட்டத்தை நிறுத்தும்படி, ஊடகத்தினர் மூலமாக, விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் அமர்ந்து பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாலும், யாரையும் விமர்சிப்பதாலும், எந்த பயனும் இல்லை. முதல்வராக உள்ளதால், எனக்கு பொறுப்புள்ளது. கோபம் அடைவதாலும், குற்றம்சாட்டுவதாலும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காது. மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனே, எங்களுக்கு முக்கியம். கலபுரகியில் பயங்கரவாதியுடன் தொடர்புள்ளவரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த, போலீசாருக்கு முழுமையான சுதந்திரம் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.