உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உள் இடஒதுக்கீடு அமல்படுத்துவோம் முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

உள் இடஒதுக்கீடு அமல்படுத்துவோம் முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு : முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் 118வது பிறந்தநாள் விழா, சமூக நலத்துறை சார்பில் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று கொண்டாடப்பட்டது. ஜெகஜீவன் ராம் சிலைக்கு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செய்தனர்.பின், சித்தராமையா அளித்த பேட்டி:ஜெகஜீவன் ராம் சமூக நீதியின் ஆதரவாளராக இருந்தார். அவரை அனைவரும் போற்ற வேண்டும். ஜாதி அமைப்பு இருக்கும் வரை, சமூகத்தில் சமத்துவமின்மை நிலவுகிறது. ஜாதி இருக்கும் வரை இடஒதுக்கீடும் இருக்க வேண்டும் என, ஜெகஜீவன் ராம் கூறி இருந்தார்.இடஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியவர்கள், தற்போது இடஒதுக்கீட்டால் பலனை அனுபவித்து வருகின்றனர். இதனால் மாநிலத்தில் உள் இடஒதுக்கீட்டை நிச்சயம் அமல்படுத்துவோம்.எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் நமது மாநிலத்திலும், தெலுங்கானா, ஆந்திராவில் மட்டும் அமலில் உள்ளது. சமூக நீதி பற்றி பேசும் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் ஏன் இல்லை?ஜாதியை உருவாக்கியவர்கள் நாங்கள் இல்லை. ஆனால் ஜாதி சமத்துவமின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்களும் மக்கள் கையில் கிடைப்பதை பா.ஜ.,வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஜெகஜீவன்ராம் பசுமை புரட்சியை கொண்டு வந்து, அனைவருக்கும் உணவை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். எங்கள் அரசு அன்ன பாக்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நமக்கு இன்னொரு அம்பேத்கர், ஜெகஜீவன் ராம் கிடைக்க மாட்டார்கள். அவர்கள் விட்டுச் சென்ற நல்லதை நாம் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ