உள்ளூர் செய்திகள்

சினிகடலை

மனைவி பக்கபலம் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா சேப்டர் 1 திரைப்படம், சக்கை போடு போடுகிறது. வசூலில் பிற மொழி படங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்த படத்தில் கலைஞர்களின் காஸ்ட்யூம், அனைவரையும் கவர்ந்தது. இதில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியது, வேறு யாருமல்ல; ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஷெட்டிதான். ஒவ்வொருவரின் உடைகளையும் அற்புதமாக டிசைன் செய்திருந்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களுக்கு, காஸ்ட்யூம் டிசைன் செய்தது நெகிழ்ச்சியான விஷயம். இதற்காக அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்,'' என்றார். ஓ.டி.டி.,யில் வெளியீடு நடிகர் யஷ்ஷின் தாய் புஷ்பா அருண்குமார் முதன் முறையாக தயாரித்த, கொத்தலவாடி திரைப்படம், கல்லாப்பெட்டியை நிரப்பவில்லை என்றாலும், கையை சுடவில்லை. போட்ட முதலீடு திரும்பியது. தற்போது அடுத்த படத்துக்கு அவர் தயாராகிறார். இதுகுறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'தன் முதல் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராஜுடன், அடுத்த படத்தையும் புஷ்பா அருண்குமார் தயாரிக்கவுள்ளார். இதில் நாயகனாக சரண் நடிப்பாரா அல்லது வேறு நடிகர் நடிப்பாரா என்பதை, இன்னும் முடிவு செய்யவில்லை. இதற்கிடையே கொத்தலவாடி திரைப்படம், ஓ.டி.டி.,யில் வெளியிட ஏற்பாடு நடக்கிறது' என்றனர். படத்தயாரிப்பில் பிஸி நடிகை ஹர்ஷிகா பூனச்சா மற்றும் அவரது கணவரும் நடிகருமான புவன் பொன்னண்ணா சமூக பணிகளில் ஈடுபடுவதுடன், தொழிலிலும் பிஸியாக உள்ளனர். சேர்ந்து படம் தயாரிக்கின்றனர். தற்போது புதிய படத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து, ஹர்ஷிகா பூனச்சா கூறுகையில், ''இரண்டு படங்களை தயாரிக்கிறோம். இதில் ஹலோ 123 யும் ஒன்றாகும். இதை பிரபல இயக்குநர் யோகராஜ் பட் இயக்குகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் கொண்டவை. படம் பற்றிய மற்ற விபரங்களை, அவ்வப்போது தெரிவிப்போம். நாயகன், நாயகிகள், துணை கலைஞர்களை இன்னும் முடிவு செய்யவில்லை,'' என்றார். நாயகனுக்கு சமம் சிம்பல் சுனி இயக்கிய, கதவைபவா படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடலை எழுதியவரும் இவரே. பாடலில் துஷ்யந்த் மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடனமாடியுள்ளனர். கதை குறித்து, சிம்பல் சுனி கூறுகையில், ''காதல் கதையை சைன்டிபிக் திரில்லர் போன்று காட்டியுள்ளோம். படத்தின் கதை, திரைக்கதையை நானே எழுதியுள்ளேன். நாயகனுக்கு சமமாக, நாயகியை தேவகன்னிகை, போர்ச்சுகீஸ் பெண் உட்பட, பல்வேறு கதாபாத்திரங்களில் காட்டியுள்ளோம். மடிகேரி, மங்களூரு, போர்ச்சுகல்லில் படப்பிடிப்பு நடத்தினோம்,'' என்றார். நடிகைக்கு அல்வா நடிகை ராகினி திரிவேதிக்கு, ஆக்ஷன் படங்கள் என்றால், அல்வா சாப்பிடுவது போன்றதாகும். அடுத்தடுத்து ஆக்ஷன் கதாபாத்திரங்களில் கலக்குகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள, சர்காரி நியாய பெலே அங்கடி திரைப்படத்திலும், இதே போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் பா.ஜ., முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா, முதல்வராக நடிக்கிறார். ராகினி திரிவேதி கூறுகையில், ''படத்தில் நான் பார்வதி என்ற கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். அரசு நியாய விலை கடைகளில் என்னென்ன முறைகேடுகள் நடக்கின்றன என்பதை, வெளிச்சத்துக்கு கொண்டு வரும் தைரியமான பெண்ணாக நடிக்கிறேன்,'' என்றார். நழுவிய வாய்ப்பு நடிகர் தர்ஷன் நடித்துள்ள தி டெவில் திரைப்படம், நடப்பாண்டு டிசம்பர் 12ல் திரைக்கு வரவுள்ளது. இதில் நாயகியாக அறிமுகமான ரச்சனா ராய் கூறுகையில், ''நான் ஜர்னலிசம் படித்துள்ளேன். எனக்கு எழுதுவதில் ஆர்வம் உள்ளது. 'ஓ மை டாக்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன். மாடலிங் செய்கிறேன். எதிர்பாராமல் நடிகையானேன். தர்ஷனுக்கு நாயகி என, இயக்குநர் கூறியபோது, என்னால் நம்ப முடியவில்லை. அவர் பெரிய ஸ்டாராக இருந்தும், ஷூட்டிங் செட்டில் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். இதற்கு முன்பே வாமனா படத்தில் நான் நடித்திருக்க வேண்டும். கல்லுாரியில் படித்ததால் சம்மதிக்கவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை