கல்லுாரி மாணவி கொலை 3வது முறை ஜாமின் தள்ளுபடி
தார்வாட்: காதலிக்க மறுத்த கல்லுாரி மாணவியை கத்தியால் குத்தி கொன்றவருக்கு, மூன்றாவது முறையாக ஜாமின் வழங்க மறுத்து, உயர் நீதிமன்றம் தார்வாட் கிளை உத்தரவிட்டு உள்ளது. ஹூ ப்பள்ளியை சேர்ந்தவர் நேஹா ஹிரேமத். அங்குள்ள கல்லுாரியில் படித்து வந்தார். அதே கல்லுாரியில் படித்து வந்த பயாஸ், 'தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி' நேஹாவை வற்புறுத்தி வந்தார். இதற்கு நேஹா சம்மதிக்கவில்லை. இதனால், 2024 ஏப்., 18 ல், கல்லுாரிக்கு வந்த பயாஸ், நேஹாவை கத்தியால் குத்தி கொன்றார். தப்பியோடிய அவரை, வித்யாநகர் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு, ஹுப்பள்ளி முதன்மை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தனக்கு ஜாமின் வழங்கும்படி இரண்டு முறை முறையிட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கர்நாடக உயர்நீதிமன்ற தார்வாட் கிளை நீதிமன்றத்தில் பயாஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பயாசின் மனுவை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் மூன்றாவது முறையாக அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.