உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திப்பு சுல்தானை பாராட்டி கருத்து: அமைச்சர் மஹாதேவப்பா பல்டி

திப்பு சுல்தானை பாராட்டி கருத்து: அமைச்சர் மஹாதேவப்பா பல்டி

பெங்களூரு : “கே.ஆர்.எஸ்., அணைக்கு அடிக்கல் நாட்டியது திப்பு சுல்தான் என்று நான் கூறவில்லை,” என, மாநில கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, 'பல்டி' அடித்துள்ளார். மாண்டியா ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ளது கே.ஆர்.எஸ்., அணை. மைசூரு மன்னர் குடும்பத்தின் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியில் 1911ல் அணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 1932ல் அணை கட்டி முடிக்கப்பட்டது . கடும் எதிர்ப்பு இதுகுறித்து, அமைச்சர் மஹாதேவப்பா நேற்று முன்தினம், 'கே.ஆர்.எஸ்., அணைக்கு அடிக்கல் நாட்டியது திப்பு சுல்தான். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. இது பற்றி யாரும் பேசுவதில்லை. திப்பு ஒரு மாவீரன்' என, தன் இஷ்டத்துக்கு பேசினார். இந்த பேச்சு, மாநில அரசியலில் சர்ச்சையை கிளப்பியது. மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர், எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று அறிஞர்களும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அவர்கள் கூறுகையில், 'அரசியலுக்காக வரலாற்றை திரித்து பொது வெளியில் பேசக்கூடாது. 'ஓட்டு வங்கி அரசியலுக்காக வரலாற்றை சிதைப்பதா? திப்பு சுல்தான் இறந்தது 1799ல், அணைக்கு அடிக்கல் நாட்டியது 1911 என, வரலாற்று சான்றுகளை முன்வைத்து பேசினர். இதையடுத்து, காங்., மேலிடத்திலிருந்தும் மஹாதேவப்பாவுக்கு கண்டனம் வந்தது. இந்த விவகாரம் தீவிரமாவதை அமைச்சர் மஹாதேவப்பா புரிந்து கொண்டார். மரியாதை இதுகுறித்து நேற்று பெங்களூரில் அவர் அளித்த பேட்டி: கே.ஆர்.எஸ்., அணையை திப்பு சுல்தான் தான் கட்டினார் என ஒரு போதும் நான் கூறவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., அணையை உருவாக்கியவர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் என்பதை, எப்போதும் ஒப்புக் கொள்கிறேன். உடையார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இப்படி ஒரே நாளில், தன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, அமைச்சர் 'பல்டி' அடித்ததை பார்த்து, ஆளுங்கட்சியினரே விமர்சித்தனர். அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறுகையில், ''காங்கிரஸ் வகுப்புவாத அரசியலில் கவனம் செலுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. இதனால், மக்களின் மனம் புண்பட்டுள்ளது. தவறான வரலாற்று உதாரணங்கள் ஆபத்தான முன்னுதாரணமாக மக்களிடம் உருவாகும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை