கொரோனா ஊழல் குறித்து விசாரணை ஆக., 31 வரை ஆணையம் நீட்டிப்பு
பெங்களூரு: கொரோனா முறைகேடு தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம், ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவியபோது, முகக்கவசங்கள், ஆக்சிஜன் உட்பட மற்ற மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. நிர்ணயித்த விலையை விட, பல மடங்கு அதிகமான பில் தொகை வழங்கியதாக, குற்றச்சாட்டு எழுந்தது.அன்றைய பா.ஜ., அரசில் பலருக்கும் முறைகேட்டில் தொடர்புள்ளதாக, காங்கிரசார் குற்றஞ்சாட்டினர். கொரோனா முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் ஆணையம் அமைத்து, 2023 ஆகஸ்ட் 25ல் முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்படி, காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2024 ஆகஸ்ட் 31ம் தேதி, ஆணையம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது.தீவிரமாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. எனவே ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. அது மார்ச் 25ம் தேதியுடன் முடிவடைந்தது.அடுத்து ஜூன் 20 வரை அரசு நீட்டிருந்தது. தற்போது ஆணையத்தின் பதவிக் காலத்தை, ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து, நேற்று அரசு உத்தரவிட்டுள்ளது.