பொறுமையாக நடந்து கொள்ளுங்கள் போலீசாருக்கு கமிஷனர் தயானந்தா அட்வைஸ்
பெங்களூரு: “போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, போக்குவரத்து போலீசார் கவனமாக நடந்து கொள்ளுங்கள்,” என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா எச்சரித்தார்.மாண்டியா, மத்துாரின், கொரவனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் அசோக், வாணிஸ்ரீ தம்பதியின் மூன்றரை வயது மகள் ரிதீக்ஷா, இம்மாதம் 26ம் தேதி வீட்டருகில் விளையாடியபோது, தெரு நாய் கடித்தது. குழந்தையை பைக்கில் அமர்த்திக் கொண்டு, மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.மத்துாரின் ஸ்வர்ண சந்திரா அருகில் சென்றபோது, போக்குவரத்து போலீசார் பைக்கை வழிமறித்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பெற்றோரும், குழந்தையும் கீழே விழுந்தனர்.தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவத்துக்கு காரணமான ஏ.எஸ்.ஐ.,க்கள் நாகராஜு, குருதேவ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.மற்றொரு பக்கம் கொரவனஹள்ளி கிராமத்தினர், குழந்தையை கடித்த நாயை அடித்துக் கொன்றனர். இந்த சம்பவத்துக்கு பின், உயர் போலீஸ் அதிகாரிகள், 'வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டாம்' என, போலீசாருக்கு உத்தரவிட்டனர்.இதுகுறித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:வாகன தணிக்கை செய்யும்போது, குடித்து விட்டு வருவோரை சோதனையிடும்போது, போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்போது, போக்குவரத்து போலீசார், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். போலீசார் பணியில் இருக்கும்போது, ரிப்ளெக்ஸ் ஜாக்கெட் அணிந்திருப்பது கட்டாயம். செக்போஸ்ட்களில் பணியில் உள்ள போலீசார், தடுப்புகள் மீது ரிப்ளெக்ஸ் லைட்டுகள் பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.சிறு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து விதிகளை மீறினால், அவர்களை ஓரமாக நிறுத்தி பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வு காணுங்கள். ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதற்கு போலீசாரே பொறுப்பாளிகள்.இவ்வாறு அவர் கூறினார்.