ஏட்டு மனைவி மர்மச்சாவு கணவர் குடும்பம் மீது புகார்
ஹாசன்: தாவணகெரே மாவட்டம், சென்னகிரியை சேர்ந்தவர் வித்யா, 25. இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, சோமலாபுரா கிராமத்தை சேர்ந்த சிவு, 30, என்பவருடன் திருமணம் நடந்தது. சிவு, பெங்களூரில் போலீஸ் நிலையம் ஒன்றில், ஏட்டாக பணியாற்றுகிறார். பெங்களூரின் சங்கராபுராவில் தம்பதி வசித்தனர்.வித்யா மூன்று நாட்களுக்கு முன்பு, திடீரென காணாமல் போனார். குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். போலீசாரிடமும் புகார் அளித்தனர். போலீசாரும் இவரை தேடி வந்தனர்.நேற்று காலை, ஹாசன், அரசிகெரேவில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரசிகெரே ரயில்வே போலீசார், அங்கு வந்து உடலை மீட்டு, விசாரணையில் ஈடுபட்டனர். இறந்து கிடந்தவர் பெங்களூரில் காணாமல் போன வித்யா என்பது தெரிந்தது.இதுகுறித்து, பெங்களூரு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 'திருமணமான நாளில் இருந்தே, தங்கள் மகளை சிவுவும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களே வித்யாவை கொலை செய்து, தண்டவாளத்தில் போட்டிருக்கலாம்' என, வித்யாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.