மதம் மாற மறுத்த மனைவி, மாமியாரை தாக்கியவர் உட்பட 9 பேர் மீது புகார்
மாண்டியா கிறிஸ்துவ மதத்துக்கு மாற வற்புறுத்தி, அவர்கள் கேட்காததால் மனைவி, மாமியாரை, இரும்பு தடியால் தாக்கிய கணவர், அவரது குடும்பத்தினர் உட்பட ஒன்பது பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவின் பாலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் - லட்சுமி தம்பதி. நான்கு ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீகாந்த் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார். அன்று முதல் தன் மனைவி லட்சுமி, மாமியார் ஸ்ருதி ஆகியோரையும் மதம் மாறும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.இதனால், தினமும் வீட்டில் சண்டை நடந்து வந்துள்ளது. கணவரின் கொடுமை, நாளுக்கு நாள் அதிகரித்ததால், மூன்று நாட்களுக்கு முன் கடிதம் எழுதி வைத்து விட்டு, லட்சுமி தற்கொலைக்கு முயற்சித்தார். ஆனால், குடும்பத்தினர் உரிய நேரத்தில் அவரை காப்பாற்றினர்.நேற்று முன்தினம் சமாதானம் பேசலாம் என்று மனைவியையும், மாமியாரையும் கணவரும், அவரது குடும்பத்தினரும் அழைத்தனர். அங்கு சென்ற இருவரையும், கிறிஸ்துவ மதத்துக்கு மாறும்படி இரும்பு தடியால் தாக்கி மிரட்டினர். படுகாயம் அடைந்த இருவரும், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தகவல் அறிந்த லட்சுமியின் சகோதரர் ரவிகிரண், ஸ்ரீரங்கபட்டணா போலீசில், சகோதரியின் கணவர் ஸ்ரீகாந்த், அவரது குடும்பத்தினர் உட்பட ஒன்பது பேர் மீது புகார் அளித்தார்.லட்சுமியின் தாயார் ஸ்ருதி கூறுகையில், ''பாலஹள்ளி கிராமத்தில் இருந்த பல ஹிந்துக்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஸ்ரீகாந்த், அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து, கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றி வருகிறார். அத்துடன், கிராமத்தில் கிறிஸ்துவ தேவாலயமும் கட்டி வருகிறார்.''கடந்த பத்து ஆண்டுகளில் இக்கிராமத்தில் ஸ்ரீகாந்த் உட்பட பலர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி உள்ளனர். மருமகன் குடும்பத்தினர் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உட்பட அனைத்து ஆவணங்களிலும் ஹிந்து பெயர்களே உள்ளன. ஆனால், தங்களை கிறிஸ்துவர்கள் என்று சமுதாயத்தில் அடையாளப்படுத்தி கொண்டு, பல சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்,'' என்றார்.போலீசார் விசாரிக்கின்றனர்.