சித்து, சிவா மீது கவர்னரிடம் புகார்
பெங்களூரு : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்த விவகாரத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், சமூக ஆர்வலர் ஒருவர் புகார் செய்துள்ளார்.பெங்களூரு, கொட்டிகேபாளையாவில் வசிக்கும் சமூக ஆர்வலர் கிரிஷ்குமார் என்பவர், கவர்னர் தாவர்சந்த் கெலாட் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளித்த புகார்:ஆர்.சி.பி., அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும்படி பொதுமக்களுக்கு, முதல்வர் சித்தராமையா தான் அழைப்பு விடுத்தார். ஐ.பி.எல்., என்பது லாப நோக்ககத்திற்காக வணிக முயற்சியாக நடத்தப்படும் விளையாட்டு. ஆர்.சி.பி., என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அணிக்கு எதற்காக பாராட்டு விழா நடத்த வேண்டும்? அணியின் உரிமையாளர்களால் பணம் கொடுத்து வீரர்கள் வாங்கப்படுகின்றனர். நாட்டிற்காகவோ அல்லது மாநிலத்திற்காகவோ விளையாடவில்லை. அவர்களுக்கு பாராட்டு விழா தேவையா?இதுபோன்ற பாராட்டு விழாக்கள் ஏன், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு செய்யப்படுவது இல்லை? ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்திற்கு சென்று ஆர்.சி.பி., அணியினரை, துணை முதல்வர் சிவகுமார் வரவேற்றது தேவையற்றது. குடிமக்களை பாதுகாக்கும் பொறுப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் மக்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தது தவறு. தவறான நிர்வாகத்திற்காக முதல்வரும், துணை முதல்வரும் பொறுப்பு ஏற்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.