பெண் எஸ்.பி., அளித்த புகார்: விசாரணைக்கு எம்.எல்.ஏ., டிமிக்கி
தாவணகெரே: தாவணகெரே பெண் எஸ்.பி., உமா பிரசாந்தை நாயுடன் ஒப்பிட்டு பேசிய வழக்கின் விசாரணைக்கு, ஹரிஹரா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் ஆஜராகவில்லை. தாவணகெரே ஹரிஹரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ். கடந்த 2ம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது, 'காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா, அவரது மகனும், தோட்டக்கலை அமைச்சருமான மல்லிகார்ஜுன், இவரது மனைவியும், தாவணகெரே எம்.பி.,யுமான பிரபா மல்லிகார்ஜுன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், அவர்களை வரவேற்க, வாசல் முன் நாய் போன்று எஸ்.பி., காத்து நிற்கிறார்' என கூறியிருந்தார். தன்னை நாயுடன் ஒப்பிட்டு பேசிய ஹரிஷ் மீது, தாவணகெரே கே.டி.ஜே.நகர் போலீஸ் நிலையத்தில், எஸ்.பி., உமா பிரசாந்த் புகார் அளித்தார். எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவானது. நேற்று முன்தினம் இரவு தாவணகெரே டவுன் விஸ்வேஸ்வரய்யா பார்க் பகுதியில் உள்ள, எம்.எல்.ஏ., வீட்டிற்கு, போலீசார் சென்றனர். ஹரிஷ் வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம், போலீசார் 'சம்மன்' கொடுத்தனர். நேற்று காலை 11:00 மணிக்கு, ஹரிஷ் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் கூறப்பட்டிருந்தது. ஆனால் நேற்று ஹரிஷ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் பெங்களூரில் உள்ளார். இன்று அவருக்கு இரண்டாவது சம்மன், போலீசார் வழங்க உள்ளனர்.