தீ தடுப்பு தடையில்லா சான்று கட்டாயம் ஊழலுக்கு வழி வகுப்பதாக புகார்
பெங்களூரு: தீ பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் பெற வேண்டும் என்ற, கர்நாடக அரசின் கட்டாய அறிவிப்பு, ஊழலுக்கு வழிவகுப்பதாக இந்திய மருத்துவ சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.கர்நாடக தனியார் மருத்துவ நிறுவனங்களின் சட்டப்படி, தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் உரிமம் பெறவும், உரிமத்தை புதுப்பிக்கவும் தீ பாதுகாப்பு சாதனங்கள் பொருத்துவது, மாநில தீ பாதுகாப்பு பிரிவில் தடையில்லா சான்றிதழ் பெற்றிருப்பது கட்டாயம்.இந்த நடைமுறையால் கர்நாடகாவில் 3,000 சிறிய, நடுத்தர மருத்துவமனைகளின் உரிமத்தை புதுப்பிப்பது தாமதமாகிறது.இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்க செயலர் சூரிராஜ் கூறியதாவது:அரசின் விதிமுறையால், மாநிலத்தில் 3,000 சிறிய, நடுத்தர மருத்துவமனைகளின் உரிமத்தை புதுப்பிப்பது தாமதமாகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை 15,000 ஆக அதிகரிக்கும். சமீபத்தில் அரசு வெளியிட்ட உத்தரவு, ஊழலுக்கு வழி வகுத்துள்ளது.மருத்துவமனைகள் இரண்டு ஆண்டுகள் ஒரு முறை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையிடம் அனுமதி கடிதம் பெறுவது கட்டாயம். ஒவ்வொரு முறையும் சிறிய மருத்துவமனைகள், கிளினிக்குகள் 30,000 முதல் 50,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 21 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட பெரிய மருத்துவமனைகள், சதுர அடி கணக்கில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த விதிமுறை மருத்துவமனைகளுக்கு, பெரும் சுமையாக உள்ளது. இப்பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.தீ விபத்து பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தும் விதிகளிலும் குளறுபடிகள் உள்ளன. தெளிவான விதிகள் வகுக்க வேண்டும்.தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் ஏற்கனவே அமலில் இருப்பதை போன்று, கர்நாடகாவிலும் 'தனி கர்நாடக மருத்துவ நிறுவனங்கள் பாதுகாப்பு சட்டம்' வகுக்க வேண்டும்.சுகாதாரத்துறை, உள்துறை, தீயணைப்பு துறை ஒருங்கிணைப்புடன், என்.ஓ.சி., பெறும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும். சரியான நேரத்தில் கே.பி.எம்.இ., உரிமம் புதுப்பிக்க வசதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.