காங்., - பா.ஜ., போட்டி போராட்டம் எம்.எல்.ஏ., மீது முட்டை வீச்சு
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் - பா.ஜ., நேற்று போட்டி போராட்டம் நடத்தினர். பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டில்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டின் முன் நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ராகுல் கைதை கண்டித்து, கர்நாடகாவில் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிட சென்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். இதுபோல குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட வந்த, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்டோர் கைதாகினர். காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த வந்த, ஹரிஹரா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் மீது, காங்கிரஸ் தொண்டர்கள் முட்டை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. முட்டை வீச்சு தொடர்பாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.