உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்ப்பிணி அதிகாரிக்கு அவமதிப்பு காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு கண்டனம்

கர்ப்பிணி அதிகாரிக்கு அவமதிப்பு காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு கண்டனம்

தாவணகெரே: ஆலோசனை கூட்டத்துக்கு வராத பெண் அதிகாரியை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா, அவமதிப்பாக பேசியது, சர்ச்சைக்கு காரணமானது. தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா. இவர் நேற்று காலை மேம்பாட்டுப் பணிகள் குறித்து, அ திகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மண்டல வனத்துறை அதிகாரி ஸ்வேதா, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதை, எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா கவனித்தார். கோபமடைந்து அவர் கூறியதாவது: ஆலோசனை கூட்டத்துக்கு வரும்படி அழைத்தால், 'கர்ப்பமாக இருக்கிறேன். கூட்டத்துக்கு வர முடியவில்லை' என்கின்றனர். ஆனால் 'கிம்பளம்' பெறும்போதும், 'கலெக்ஷன்' பெறும்போதும், கர்ப்பமாக இருப்பது இல்லையா? ஒவ்வொரு முறையும், 'மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்கிறேன். அங்கு செல்கிறேன், இங்கு செல்கிறேன்' என்கின்றனர். கர்ப்பமாக இருந்தால், விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு, இதுபோன்று காரணம் கூறுவதற்கு, வெட்கமாக இல்லையா? பிரசவ நாள் வரை சம்பளம் வேண்டும். ஆனால், வேலை செய்ய முடியாது. வாயை திறந்தாலே, 'கர்ப்பம்' என்கிறார். இப்படி கூற அவருக்கு வெட்கமாக இல்லையா? பிரசவ விடுமுறை உள்ளது. எடுத்துக் கொள்ளட்டும். ஆலோசனை கூட்டத்துக்கு வராத அதிகாரிக்கு, விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எம். எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா, பெண் அதிகாரியை அவமதித்ததை, பொது மக்கள் சமூக வலைதளங்கள் மூலம், வன்மையாக கண்டித்துள்ளனர். 'கர்ப்பிணி அதிகாரியை இழிவாக பேசியது சரியல்ல' என, அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி