கர்நாடகாவை அழிக்கும் காங்கிரஸ் அரசு மத்திய அமைச்சர் குமாரசாமி காட்டம்
பெங்களூரு : ''காங்கிரஸ் அரசு, தன் மோசமான நிர்வாகத்தின் மூலம் கர்நாடகாவை அழித்து வருகிறது,'' என, மத்திய கனர தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.பெங்களூரில் நேற்று முதல் குப்பை கொட்டுவதற்கான வரி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 10 முதல் 400 ரூபாய் வரை வரி கொடுத்தல் கட்டாயம் ஆகும். இது பெங்களூரு வாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மத்திய அமைச்சர் குமாரசாமி, தன், 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:வளமான கர்நாடகாவை காங்கிரஸ் அரசு தன் மோசமான நிர்வாகத்தின் மூலம் அழித்து வருகிறது. பேராசை என்ற அரக்கனின் வடிவத்தை எடுத்து, மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது.குப்பை வரி என்ற பெயரில் கோடிக்கணக்கிலான ரூபாயை குறிவைக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு பொய், ஒவ்வொரு மாதமும் ஒரு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது.தண்ணீர், மெட்ரோ ரயில், அரசு பஸ் கட்டணம், பால், தயிர், மின்சாரம் உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளது. முத்திரை வரி, கலால் வரி உள்ளிட்ட வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன.அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை, மருத்துவ சான்றிதழ் பெறவும், ஆய்வக சோதனை ஆகியவற்றின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால், மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.