உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்கிரஸ் தலைவர் கார்கே ஊரில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி

காங்கிரஸ் தலைவர் கார்கே ஊரில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி

யாத்கிர்: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்த ஊரான யாத்கிரில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். கலபுரகியில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தொகுதியான சித்தாபூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த எதிர்ப்பு கிளம்பியதால், தற்போது இப்பிரச்னை நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்த ஊரான யாத்கிர் மாவட்டம், குர்மித்கல்லில், இன்று ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், மாவட்ட கலெக்டர் ஹர்ஷன் பாயரிடம் மனு வழங்கினர். அதில், 'குர்மித்கல் டவுன் நரேந்திர ராத்தோட் லே - அவுட்டில் இருந்து சாம்ராட் சதுக்கம், பசவேஸ்வரா சதுக்கம், ஹனுமன் கோவில், கும்பாரவடி வழியாக ஊர்வலம் நடக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தனர். இதற்கு அனுமதி அளித்துள்ள கலெக்டர், பத்து நிபந்தனைகளை விதித்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:  பொது, தனியார் சொத்துகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. மனுவில் குறிப்பிட்ட சாலைகளில் தான் ஊர்வலம் நடத்த வேண்டும். ஜாதி, மதங்கள் தொடர்பான கோஷம் எழுப்ப கூடாது. ஆபத்தான ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடாது.  சாலையை மறித்து, பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.  ஊர்வலத்தின்போது கடைகளை மூடும்படி கட்டாயப்படுத்த கூடாது.  சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டாலோ, வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டாலோ, ஊர்வலம் ஏற்பாடு செய்தவர்களே பொறுப்பு. இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ