உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டிசம்பர் வரை பொறுத்திருக்கும்படி காங்., மேலிடம்... சஸ்பென்ஸ்! முதல்வர், அமைச்சர்கள் மாற்றம் இப்போது இல்லை

டிசம்பர் வரை பொறுத்திருக்கும்படி காங்., மேலிடம்... சஸ்பென்ஸ்! முதல்வர், அமைச்சர்கள் மாற்றம் இப்போது இல்லை

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம் 20ம் தேதியுடன் அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் முடிகிறது. மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு அமைச்சர் பதவி மீது ஆசை வந்து உள்ளது. இதை பகிரங்கமாகவே கூற ஆரம்பித்து உள்ளனர்.சில அமைச்சர்கள் தங்கள் பேச்சை கேட்பது இல்லை என்று, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் முணுமுணுக்க ஆரம்பித்து உள்ளனர். ஒவ்வொரு முறையும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கும் போது அமைச்சர்கள் - எம்.எல்.ஏ.,க்கள் வார்த்தை மோதலில் ஈடுபடுவது, தொடர்ந்து நடந்து வருகிறது.சில அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை. தங்கள் துறையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் உள்ளனர் என்றும், முதல்வருக்கு தகவல் கிடைத்தது. இதனால் சில அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாம் என்று சித்தராமையா நினைக்கிறார்.ஆனால், 'இரண்டரை ஆண்டு ஒப்பந்தப்படி, நவம்பரில் முதல்வரே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்வார்' என்று, எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். முடா வழக்கில் சற்று நிம்மதியாக இருந்த சித்தராமையாவுக்கு, அமலாக்கத் துறையால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

நிம்மதி, ஏமாற்றம்

இதனால், நவம்பருக்கு முன்பே, அவர் ராஜினாமா செய்யவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் டில்லி சென்ற சித்தராமையா, ராகுல் உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். அமைச்சரவை மாற்றம் குறித்து பேசி இருக்கிறார்.'மே மாதத்திற்கு பின், அமைச்சரவை மாற்றம் குறித்து பேசி கொள்ளலாம்' என்று கூறி, அனுப்பி வைத்து உள்ளனர். இதன்மூலம் முதல்வர், அமைச்சர்கள் மாற்றம் தற்போது இல்லைக்கு என்று தெரிந்து உள்ளது. ஆனாலும் கட்சி மேலிடம் அனுப்பிய, இன்னொரு தகவலில், 'டிசம்பர் வரை பொறுத்து இருங்கள். அதற்கு அப்புறம் அமைச்சரவை மாற்றம் குறித்து பேசி கொள்ளலாம்' என்றும் கூறி, சஸ்பென்ஸ் வைத்துள்ளனர்.இதனால் அமைச்சர் பதவி பறிபோகுமோ என்ற பயத்தில் இருந்தவர்கள், தற்போதைக்கு நிம்மதி அடைந்து உள்ளனர். அதே நேரம் பதவி எதிர்பார்த்து இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இந்நிலையில் டில்லி சென்று திரும்பிய சித்தராமையாவை, பரமேஸ்வர், ராஜண்ணா, சதீஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். மேலிட தலைவர்களிடம் இருந்து ஏதாவது தகவல் உள்ளதா என்றும், ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

நாகேந்திரா

டில்லியில் பேசியது பற்றி வாய் திறக்க முதல்வர் மறுக்கிறார். நாகேந்திராவின் ராஜினாமாவால் கர்நாடக அமைச்சரவையில் ஒரு இடம் காலியாக உள்ளது. மீண்டும் நாகேந்திராவை அமைச்சரவையில் சேர்க்க, சித்தராமையா தொடர்ந்து முயற்சித்து வருகிறார். டில்லி பயணத்தின் போதும், இதுபற்றி பேசி உள்ளார். மேலிடம் சாதமான பதில் கொடுக்கவில்லை. இதனால் நாகேந்திரா கடும் அதிருப்தியில் உள்ளார். வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்ததில் இருந்து தீவிர அரசியலில் இருந்து, நாகேந்திரா ஒதுக்கியே உள்ளார். அமைச்சர் பதவி கிடைக்கா விட்டால், அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை