உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆலந்த் தொகுதியில் ஓட்டு திருட்டு காங்., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

ஆலந்த் தொகுதியில் ஓட்டு திருட்டு காங்., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

கலபுரகி : சட்டசபை தேர்தலின்போது ஆலந்த் தொகுதியில், ஓட்டு திருட்டு மோசடி முயற்சி நடந்ததாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் குற்றஞ்சாட்டி உள்ளார். கலபுரகியில் நேற்று அவர் அளித் த பேட்டி: கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, ஆலந்த் தொகுதியில், என்னை தோற்கடிக்க சதி நடந்தது. என் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6,000 பெயர்களை நீக்கி, ஓட்டு திருட்டு மோசடி முயற்சி நடந்தது. தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயர்களை நீக்க, ஆலந்த் தொகுதியில் 6,018 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 24 விண்ணப்பங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், மீதமுள்ளவை போலியான விண்ணப்பங்கள் என்றும் தெரிய வந்தது. என் ஆதரவாளர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சி நடந்தது. இதற்கு ஆலந்த் தொகுதியின் அப்போதைய தேர்தல் அதிகாரி தான் காரணம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், என் தொகுதியில் நடந்த முறைகேடு பற்றி விசாரிக்க சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் போதுமான தகவல் வழங்காததால், விசாரணை முடங்கி உள்ளது. கடும் போட்டி உள்ள 30 முதல் 40 தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கி வெற்றி பெறலாம் என்று பா.ஜ., முயற்சி செய்தது. ஆனால் அது நடக்கவில்லை. பா.ஜ.,வின் முயற்சி, ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ஆலந்த் தொகுதியில் நடக்க இருந்த ஓட்டு திருட்டு மோசடி முயற்சி பற்றி, மேலிட தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்திற்கும் செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ