விளம்பர பேனர்களை உடனே அகற்ற மாநகராட்சி உத்தரவு
சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, பாதுகாப்பு இல்லாத விளம்பர பதாகைகள், பேனர்களை உடனே அகற்ற, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விளம்பர பேனர்கள், பதாகைகள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத கட்டமைப்புகளை உடனே அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்கான பணி நடந்து வருகிறது. பு யல் எச் சரிக்கையின்போது, காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. எதிர்பார்த்ததை விட குறைவான மழை தான். மழைநீர் தேக்கம் போன்ற பெரிய பாதிப்புகள் இல்லை. பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவ மழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநகராட்சி செய்து வருகிறது. இவ்வாறு குமர குருபரன் கூறினார்.