உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த சம்பவம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தம்பதி

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த சம்பவம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தம்பதி

பெல்லந்துார்: பொது இடத்தில் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த இளம்பெண், தன் தவறை உணர்ந்து, கணவருடன் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆயினும் ஆட்டோ ஓட்டுநர், புகாரை திரும்ப பெற மறுத்து விட்டார்.பெங்களூரின் தொட்ட சோமனஹள்ளியில் வசிப்பவர் லோகேஷ், 35; ஆட்டோ ஓட்டுநர்.மே 28ம் தேதியன்று மதியம் பெல்லந்துாரின் சென்ட்ரல் மால் அருகில், ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற ஸ்கூட்டர் மீது, லேசாக மோதிவிட்டார்.

வாக்குவாதம்

இதனால், இருசக்கர வாகனத்தில் இருந்த வாலிபரும், அவர் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணும், ஆட்டோவை வழிமறித்து லோகேஷுடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் அந்த பெண், லோகேஷை செருப்பால் அடித்தார். இதை பார்த்த அப்பகுதியினர், பெண்ணை கண்டித்து அங்கிருந்து அனுப்பினர்.இதை, தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது வேகமாக பரவியது. பலரும் அந்த பெண்ணை கண்டித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.ஆட்டோ ஓட்டுநர் லோகேஷ், பெல்லந்துார் போலீஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

பீஹார் பெண்

போலீசாரும் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில் இருந்த, ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து, பெண்ணை கண்டுபிடித்தனர்.அவரை நேற்று முன்தினம் பெல்லந்துார் போலீஸ் நிலையத்துக்கு வரும்படி கூறினர். அவரும் தன் கணவருடன் வந்தார். அவரை கைது செய்த போலீசார், விசாரணையை துவக்கினர்.அவரது பெயர் பங்காயினி மிஸ்ரா, 28, பீஹாரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.விசாரணையில் அவர் கூறியதாவது:பீஹாரை சேர்ந்த நான், கடந்த மூன்று ஆண்டுகளாக, கணவருடன் பெங்களூரில் வசிக்கிறேன். இங்குள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணயாற்றுகிறேன். தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன். சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, ஸ்கூட்டரில் வீடு திரும்பும்போது, ஸ்கூட்டரின் பின்புறம் ஆட்டோ மோதியது.

வருத்தம்

இதுகுறித்து, கேள்வி எழுப்பிய என்னை ஆட்டோ ஓட்டுநர் திட்டினார்; தாக்கவும் முற்பட்டார். கோபத்தில் நான் அவரை செருப்பால் அடித்தேன். கோபத்தால் பொறுமை இழந்து அப்படி செய்ததற்கு வருத்தம் அடைகிறேன்.எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விடுமோ என்ற பயமும் ஏற்பட்டது. ஓட்டுநரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.இனி எப்போதும் இப்படி நடந்து கொள்ள மாட்டேன். பெங்களூரின் கலாசாரத்தையும், ஆட்டோ ஓட்டுநர்களையும் மதிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, அப்பெண்ணும், அவரது கணவரும் ஆட்டோ ஓட்டுநர் லோகேஷின் காலில் விழுந்து, மன்னிப்பு கேட்டனர். அந்த பெண், கர்ப்பிணி என்பதால் போலீசார், ஸ்டேஷன் ஜாமினில் விடுதலை செய்தனர்.

புகாரை வாபஸ் பெற டிரைவர் மறுப்பு

பெண் மன்னிப்பு கேட்டாலும், தன் புகாரை திரும்ப பெற முடியாது என்பதில், ஆட்டோ ஓட்டுநர் லோகேஷ் உறுதியாக இருக்கிறார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:என்னை தாக்கியதற்காக, அப்பெண்ணுக்கு இப்போது பச்சாதாபம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணும், அவரது கணவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் மன்னிப்பு கேட்டதால், நடந்த சம்பவம், இல்லை என்றாகிவிடுமா?அந்த பெண் பொது இடத்தில் வைத்து, என்னை செருப்பால் அடித்தபோது கூனி குறுகினேன். வருத்தம் அடைந்தேன். இரண்டு நாட்களாக என் குடும்பத்தினர் உட்பட, யாரிடமும் நான் பேசவில்லை.வெளியே என் முகத்தை காட்டவும், தர்மசங்கடமாக இருந்தது. எந்த காரணத்தை கொண்டும், என் புகாரை நான் திரும்பப் பெறமாட்டேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் போராட்டம் நடத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை