வேலை பார்த்த வீட்டில் திருடிய தம்பதி கைது
அம்ருதஹள்ளி: முதலாளி வீட்டில், 25 லட்சம் ரூபாய் திருடிய, நேபாள தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு அம்ருதஹள்ளி அர்க்காவதி லே - அவுட்டில் வசிப்பவர் சுப்பா ரெட்டி; தொழில் அதிபர். இவர், தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக, கடந்த மாதம், 27ம் தேதி காலையில் வங்கிக்கு சென்று, 25 லட்சம் ரூபாயை எடுத்து வந்து, வீட்டின் பீரோவில் வைத்திருந்தார். அன்றைய தினம் தம்பதி சொந்த வேலையாக வெளியே சென்றனர். மாலையின் வீட்டிற்கு திரும்பிய போது பீரோவில் இருந்த பணம் திருடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் வேலை செய்த நேபாளத்தை சேர்ந்த பவன் பிஸ்தா, அவரது மனைவி சீதா பிஸ்தா ஆகியோரை காணவில்லை. அவர்களின் மொபைல் போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தன. அவர்கள் தான், பணத்தை திருடியதை உறுதி செய்த சுப்பா ரெட்டி, அம்ருதஹள்ளி போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே, அம்ருதஹள்ளியில் வசித்த தம்பதி, அங்கிருந்து தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடினர். அவர்களை பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில், பவனும், சீதாவும் வசித்தது தெரிந்தது. நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார், இருவரையும் கைது செய்து, 25 லட்சம் ரூபாயை மீட்டனர். ஆடம்பர வாழ்க்கை ஆசையில், பணம் திருடியதை, தம்பதி ஒப்பு கொண்டனர்.