உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பாரம்பரிய விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி

 பாரம்பரிய விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி

- நமது நிருபர் - மறைந்து வரும் இந்திய பாரம்பரிய விளையாட்டுகளை மீண்டும் குழந்தைகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப பணியை ராஜினாமா செய்த மைசூரு தம்பதி, 15 வகையான இந்திய பாரம்பரிய விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து, மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். தாவணகெரேயை சேர்ந்தவர் தனுஸ்ரீ, இவரது கணவர் சசிசேகர், மைசூரை சேர்ந்தவர். இருவரும் தற்போது மைசூரில் வசித்து வருகின்றனர். இருவரும் பெங்களூரில் தனியார் நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணியாற்றி வந்தனர். தனஸ்ரீ, 2014ல் தன் பணியை ராஜினாமா செய்தார். வீட்டில் இருந்தபடி கைவினை நகைகளை செய்து வந்தார். 2019ல் அவருக்கு இந்திய பாரம்பரிய விளையாட்டு பொருட்கள் மீது கவனம் திரும்பியது. அதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவரது கணவர் சசிசேகர், தன் பணியை ராஜினாமா செய்தார். கணவன் - மனைவி இருவரும் 2023ல் 'ரோல் தி டைஸ்' என்ற நிறுவனத்தை உருவாக்கி, இந்திய பாரம்பரிய விளையாட்டு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். தங்கள் வெற்றி கதை குறித்து தம்பதி கூறியதாவது: நாங்கள் இருவரும் தொழில்நுட்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இன்றைய குழந்தைகள் தங்கள் கவனத்தை மொபைல் போன், 'டிவி'க்களில் செலுத்துகின்றனர். இவர்கள் நம் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ளவும், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்த விளையாட்டில் ஈடுபட வைத்து, இந்த விளையாட்டுகளுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று எங்களுக்கு தோன்றியது. ஒரு தொழிலை உருவாக்குவதை விட, அந்த தொழில் கலாசாரத்தை பாதுகாக்கவும், சமூகத்தை மேம்படுத்தும்படியாக இருக்க வேண்டும். அதற்காகவே, 'ரோல் தி டைஸ்' என்ற நிறுவனத்தை உருவாக்கினோம். எங்கள் நிறுவனத்தில், பல வகையான தாயக்கட்டை விளையாட்டு, பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், ஒன்பது காய்களை வைத்து விளையாடும் நவகங்கரி உட்பட 15 வகையான இந்திய பாரம்பரிய விளையாட்டு பொருட்களை உருவாக்கி வருகிறோம். இந்த விளையாட்டுகளை விளையாடுவது நமக்கு பொறுமை, வியூகம், தோழமை கற்றுக்கொடுக்கும். அதேவேளையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது, நீண்ட நாள் உழைக்கும் வகையில் பொருட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ஆடைகளில் உருவாக்கி வருகிறோம். இந்த ஆடைகள், சூரத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. அதில், பெங்களூரை சேர்ந்த எம்பிராய்ட்ரி நிபுணர்கள் மூலம் விளையாட்டுக்கு ஏற்பட எம்பிராய்ட்ரி செய்யப்படுகிறது. மர பொம்மைகள் தயாரிக்கப்படும் சென்னபட்டணாவில் இருந்து, மரத்தில் செய்யப்பட்ட பகடை, காய்கள் வாங்குகிறோம். இது தவிர, இந்த விளையாட்டுகள் விளையாட தெரியாதவர்களுக்கு, எங்களின் https://rollthedice.in/ என்ற இணையதளத்தில் கற்றுத் தரப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். விபரங்களுக்கு, 80889 32576 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ