குமாரசாமியிடம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
பெங்களூரு : அரசு நிலம் 550 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஒதுக்கியதாக கூறப்படும் வழக்கில், மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவரிடம் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி. இவர், 2006ல் கர்நாடக முதல்வராக இருந்தபோது, பல்லாரி சண்டூரில் சாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் நிறுவனத்திற்கு 550 ஏக்கர் அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து லோக் ஆயுக்தாவின் சிறப்பு விசாரணை குழு விசாரிக்கிறது. அந்த குழுவின் தலைவராக உள்ள லோக் ஆயுக்தா ஐ.ஜி., சந்திரசேகர், குமாரசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, கவர்னரிடம் அனுமதி கேட்ட தகவல் வெளியானது. இதனால் குமாரசாமி, சந்திரசேகர் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இடைக்கால தடை
தன்னை மிரட்டியதாக சந்திரசேகர் அளித்த புகாரில், குமாரசாமி, அவரது மகன் நிகில், எம்.எல்.ஏ., சுரேஷ்பாபு ஆகியோர் மீது பெங்களூரு சஞ்சய்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில், குமாரசாமி மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி பிரதீப்சிங் யெரூர் விசாரிக்கிறார். இவ்வழக்கில் குமாரசாமியிடம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது.இதற்கிடையில் 550 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய வழக்கில், குமாரசாமிக்கு முன்ஜாமின் வழங்கியும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில் ஐ.ஜி., சந்திரசேகரை மிரட்டிய வழக்கில் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையால், அரசு நிலத்தை ஒதுக்கிய வழக்கில் குமாரசாமியிடம் விசாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் சுரங்க முறைகேடு வழக்கில் விசாரிக்க அனுமதி தரும்படியும், உயர் நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா மனுத் தாக்கல் செய்தது. தாராளமாக...
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரதீப்சிங் யெரூர் நேற்று அளித்த தீர்ப்பில், 'நிலம் ஒதுக்கிய வழக்கு குறித்து, இனி இங்கு பேசப்பட மாட்டாது. அந்த வழக்கில் தாராளமாக விசாரணை நடத்தலாம். நான் பிறப்பித்த இடைக்கால உத்தரவு, ஐ.பி.எஸ்., அதிகாரியை மிரட்டியதாக பதிவான வழக்கிற்கு மட்டுமே பொருந்தும்' என்றார்.