உள்ளூர் செய்திகள்

 கிரைம் கார்னர்

மனைவியை கொன்ற கணவர்

பீஹார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி தீரஜ்குமார், 25, ரியா குமாரி, 23. நான்கு மாதங்களாக பெங்களூரு கும்பலகோடு கெருபாளையாவில் வாடகை வீட்டில் வசித்தனர். கடந்த 27ம் தேதி கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ரியா குமாரியை கழுத்தை நெரித்து கொன்று, உடலை போர்வையில் சுருட்டி வைத்து விட்டு, தீரஜ் குமார் தப்பினார். நேற்று காலை இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தீரஜ்குமாரை போலீசார் தேடுகின்றனர்.

கொள்ளையில் 6 பேர் கைது

பெங்களூரின் கொடத்தி கேட் ராயசந்திரா பகுதியில், கடந்த, 25ம் தேதி குளிர்பானங்களை ஏற்றி சென்ற லாரியை மறித்த மர்மநபர்கள், துப்பாக்கியை முனையில் டிரைவரிடம் இருந்து, 16,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். வர்த்துார் போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் பீஹார் மாநிலத்தின் அஜய் குமார், அக் ஷய் குமார், ரோஹித், ஆகாஷ் குப்தா, மாருதி ராவ், ஒரு சிறுவன் என ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 10,000 ரூபாய் ரொக்கம், எட்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கார் கண்ணாடி உடைப்பு

பெங்களூரு ரூரல் கே.ஜி.குண்டனஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியின் கரையில் அமர்ந்து, கடந்த 26ம் தேதி அனுபம் குமார் என்பவர், தனது காதலியுடன் பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த கும்பல், அனுபம்குமார் காதலியை கிண்டல் செய்தது. இதனால் தகராறு ஏற்பட்டது. அனுபம்குமார் தனது நண்பர் அரவிந்த்தை அங்கு வரவழைத்தார். தகராறின் போது அரவிந்த் கார் கண்ணாடியை, கும்பல் உடைத்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் தொட்டபல்லாபூர் போலீசார் நேற்று நான்கு பேரை கைது செய்தனர்.

இளைஞர் தற்கொலை

உத்தர கன்னடா, ஹொன்னாவராவில் வசித்த ஹரிஷ் மேஸ்தா, 24, கார் ஓட்டுநராக பணியாற்றினார். இவர் இளம்பெண்ணை காதலித்தார். அப்பெண் சமீபத்தில், காதலை முறித்து கொண்டு விலகினார். காதல் தோல்வியால் மனம் வருந்திய ஹரிஷ் மேஸ்தா, நேற்று மதியம் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொருட்கள் ஒப்படைப்பு

ஹாவேரி நகரின், பல்வேறு இடங்களில் நடந்த குற்ற வழக்குகளில், 2.30 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, போலீசார் மீட்டனர். இந்த பொருட்கள், நேற்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

வீடு புகுந்து திருட்டு

உத்தர கன்னடா, முன்டரகியின், மாரிகாம்பா நகரில் வசிப்பவர் பாட்ஷா மரதடி. இவரது குடும்பத்தினர், நேற்று காலை பணி நிமித்தமாக வீட்டை பூட்டி விட்டு, வெளியே சென்றிருந்தனர். வீட்டை நோட்டம் விட்ட மர்ம நபர், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 2.5 கிராம் தங்க நகை, 3,000 ரூபாயை திருடினார். அதன்பின் காஸ் அடுப்பை பற்ற வைத்து, டீ தயாரித்து குடித்துவிட்டு தப்பியோடினார். பாட்ஷா வீட்டுக்கு வந்த போது, திருட்டு நடந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை