உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முஸ்லிம்கள் பற்றி சர்ச்சை கருத்து சி.டி.ரவியை கைது செய்ய தடை 

 முஸ்லிம்கள் பற்றி சர்ச்சை கருத்து சி.டி.ரவியை கைது செய்ய தடை 

பெங்களூரு: முஸ்லிம்கள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த, பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவியை, 31ம் தேதி வரை கைது செய்ய, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிக்கமகளூரில் கடந்த 23ம் தேதி பா.ஜ., சார்பில் நடந்த போராட்டத்தில், எம்.எல்.சி., சி.டி.ரவி பேசுகையில், 'நீட் தேர்வுக்கும், முல்லாக்களுக்கும் என்ன சம்பந்தம்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இந்த பேச்சு முஸ்லிம்களின் உணர்வுகளை துன்புறுத்தியதாக, சிக்கமகளூரு ஜாமியா மசூதி தலைவர் முதாசிர் பாஷா அளித்த புகாரில், ரவி மீது சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அறிக்கை தாக்கல் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்க, ரவி வீட்டிற்கு நேற்று முன்தினம் போலீசார் சென்றனர். நோட்டீஸை வாங்க ரவி மறுத்தார். வீட்டின் சுவரில் ஒட்டப்பட்ட நோட்டீஸை, ரவி ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர். இந்நிலையில் ரவி எம்.எல்.சி.,யாக இருப்பதால் அவர் மீது பதிவான வழக்கு, பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திற்கு நேற்று மாற்றப்பட்டது. சிக்கமகளூரு டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரும், விசாரணை அதிகாரியான அபய் பிரகாஷ் நேற்று பெங்களூரு வந்து, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் சில தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்துவிட்டு சென்றார். இதற்கிடையில் முல்லாக்கள் என்பது முஸ்லிம்கள் இல்லை என்று தனது பேச்சுக்கு, ரவி விளக்கம் அளித்தார். தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இம்மனுவை நீதிபதி நாகபிரசன்னா நேற்று விசாரித்தார். நியாயம் இல்லை ரவி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அருண் ஷ்யாம் வாதிடுகையில், ''மூன்றாம் நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நியாயம் இல்லை. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை மனுதாரர் பயன்படுத்தவே இல்லை. அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்,'' என கூறினார். அரசு தரப்பில் வக்கீல் ஜெகதீஷ் வாதிடுகையில், ''விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் வழங்க சென்ற போலீசாரை, மனுதாரர் மிரட்டியுள்ளார். தானே நீதிமன்றம் என்பது போல நடந்து உள்ளார். அவரை கைது செய்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்,'' என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான அடுத்த விசாரணையை 31 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை ரவியை கைது செய்யவும் போலீசாருக்கு தடை விதித்துள்ளார்.

7 நாட்கள் அவகாசம்

சி.டி.ரவி கூறுகையில், ''சிக்கமகளூரு போலீசார் எனக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். தற்போது மாநிலம் முழுதும் சென்று, வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்கிறேன். இதனால் விசாரணைக்கு ஆஜராக ஒரு வாரம் கால அவகாசம் கேட்டுள்ளேன். முல்லா என்றால் முஸ்லிம் இல்லை என்பதை கூகுளில் பார்த்து தெரிந்து கொண்டேன். ''பொய் புகார் அடிப்படையில் என்னை கைது செய்ய நினைத்தால் அதற்கும் தயாராக உள்ளேன். நான் பயங்கரவாதி இல்லை. பொது நபர். உண்மையை சொல்வதை நிறுத்த மாட்டேன். ஹிந்துத்துவாவிற்காக சிறை செல்லவும் தயார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை