| ADDED : செப் 06, 2025 06:45 AM
உடுப்பி:பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, 69 வயது முதியவரிடம், 1.32 கோடி ரூபாயை சைபர் மோசடி கும்பல் அபகரித்த சம்பவம் நடந்துள்ளது. உடுப்பி நகரை சேர்ந்தவர் ஹென்றி டி அல்மெய்டா, 69. இவர், கடந்த ஜூலை 19ம் தேதி, தன் மொபைல் போனில் முகநுாலை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, 'ஆன்லைன் டிரேடிங்'கில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக சம்பாதிக்கலாம் என்ற பதிவை பார்த்தார். இதை நம்பிய அவர், அதில் கொடுக்கப்பட்ட 'லிங்க்கை கிளிக்' செய்தார். இதையடுத்து, அவரது 'வாட்சாப்' எண்ணுக்கு அன்கிதா கோஷ் என்ற பெண் 'மெசேஜ்' அனுப்பினார். 'டிரேடிங்' குறித்து விளக்கம் அளித்தார். டிரேடிங் தொடர்பான வாட்சாப் குழுவில் அவரை இணைத்தார். அந்த குழுவில், பலரும் தாங்கள் சம்பாதித்த தொகை என கூறி, 'ஸ்கிரீன் ஷாட்டு'களை அனுப்பினர். இதை பார்த்து ஹென்றி முழுதுமாக நம்பி, வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்., கார்டு உட்பட அனைத்து விவரங்களையும் அப்பெண்ணிடம் வழங்கினார். இதையடுத்து, அப்பெண் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு, கடந்த ஜூலை 22 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை, 1.32 கோடி ரூபாய் பணத்தை அவர் அனுப்பினார். இந்த பணம் இரட்டிப்பாக்கப்பட்டு பல கோடிகளில் உள்ளதாக அப்பெண் கூறினார். இதையடுத்து, அவர் பணத்தை தன் வங்கிக் கணக்கிற்கு மாற்றும்படி அப்பெண்ணிடம் கூறினார். ஆனால், அப்பெண்ணிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹென்றி, உடுப்பி சி.இ.என்., போலீசில் புகார் அளித்தார்.