உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மங்களூரில் 6 மாதங்களில் 94 கோடி ரூபாய்க்கு சைபர் மோசடி

மங்களூரில் 6 மாதங்களில் 94 கோடி ரூபாய்க்கு சைபர் மோசடி

தட்சிண கன்னடா: மங்களூரு மாவட்டத் தில் மட்டும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 94.15 கோடி ரூபாய் சைபர் மோசடி நடந்துள்ளதாக தட்சிண கன்னடா மாவட்ட டி.எஸ்.பி., அருண் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மங்களூரில், 77 சைபர் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன. 15.51 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. அதேபோல, மங்களூரை தவிர மாவட்டத்தின் பிற பகுதிகளில் 60 வழக்குகள் பதிவாகி உள்ளன. 78.64 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களிலே அதிக மோசடி நடந்துள்ளது. பெரும்பாலான சைபர் மோசடிகள் சூதாட்டம், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறியே நடக்கின்றன. சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள், கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். சைபர் மோசடி கும்பலிடம் சிக்கியவர்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் பரிவர்த்தனைகளின்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுந்தகவல்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம். வங்கி விபரம், ஓ.டி.பி., எனும் ஒரு முறை கடவுச்சொல் உள்ளிட்டவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். சைபர் மோசடியில் சிக்கியவர்கள் உடனடியாக '1930' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்ய வேண்டும். குறிப்பாக, பண்டிகை காலத்தின்போது பரிசு, லாட்டரி எனும் பெயர்களில் சைபர் திருடர்கள் மோசடி செய்கின்றனர். எனவே, அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி