75 சதவீத இலக்கை எட்டியது தட்சிண கன்னடா மாவட்டம்
தட்சிண கன்னடா: மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தைச் செயல்படுத்துவதில் தட்சிண கன்னடா மாவட்டம் 75 சதவீத இலக்கை எட்டியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான அளவு குடிநீரை குழாய் மூலம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, 'ஜல் ஜீவன்' திட்டம். இந்தத் திட்டத்தில் 75 சதவீதத்தை தட்சிண கன்னடா மாவட்டம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து தட்சிண கன்னடா மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி நர்வாடே விநாயக் கார்பாரி கூறியதாவது: மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் 90,388 குடிநீர் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, மாவட்டத்தின் ஒன்பது தாலுகாக்களில் 67,406 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 3,34,185 வீடுகளையும், 14,47,760 மக்கள்தொகையையும் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 2,43,797 வீடுகளுக்கு ஏற்கனவே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், இன்னும் 22,982 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்தத் திட்டம் மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூன்று கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 700 பணிகளை மேற்கொள்ள 573.92 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. முதல் கட்டத்தில் 458 பணிகளும், இரண்டாவது கட்டத்தில் 134 பணிகளும், மூன்றாவது கட்டத்தில் 108 பணிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன. இத்திட்டத்திற்காக 517.5 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், மாவட்டம் 93.8 சதவீத பணி முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மொத்தம் உள்ள 700 பணிகளில் 657 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தவிர மாவட்டத்தில் உள்ள 144 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 7 புதிய 'பல கிராம குடிநீர் திட்டங்கள்' செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் மூடுபிதிரே, உலாய்பெட்டு, இளந்திலா, குத்ருபாடி, அலங்காரு, அலிகே, உள்ளால்-கோட்டேகர் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு கூறினார்.