சுமலதா குடும்ப விழா பங்கேற்காத தர்ஷன்
பெங்களூரு: முன்னாள் எம்.பி., சுமலதா அம்பரிஷ் பேரனுக்கு, நேற்று பெயர் சூட்டு விழா நடந்தது. இதில் நடிகர் தர்ஷன் பங்கேற்கவில்லை.சுமலதா அம்பரிஷின் மகனும், நடிகருமான அபிஷேக் மனைவி அவிவா. இவருக்கு கடந்தாண்டு நவம்பர் 12ம் தேதி, ஆண் குழந்தை பிறந்தது. தன் கணவர் அம்பரிஷ் மீண்டும் பிறந்து வந்ததாக, சுமலதா மகிழ்ச்சி தெரிவித்தார்.பெங்களூரின், தனியார் ஹோட்டலில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பங்கேற்றனர். குழந்தைக்கு 'ராணா அமர் அம்பரிஷ்' என, பெயர் சூட்டியுள்ளனர். மறைந்த நடிகர் அம்பரிஷின் இயற் பெயர் அமர்நாத். ராணா என்றால் ராஜா என, அர்த்தம்.இந்நிகழ்ச்சியில், சுமலதா குடும்பத்துக்கு நெருக்கமான நடிகர் தர்ஷன் பங்கேற்கவில்லை. இவரை தன் வளர்ப்பு மகன் என, சுமலதா கருதினார். இவர் மாண்டியா லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது, தர்ஷன் பம்பரமாக சுற்றி வந்து பிரசாரம் செய்தார். ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில், தர்ஷன் கைதாகி, சிறைக்கு சென்ற பின், இவர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமலதா பேரன் பெயர் சூட்டு விழாவிலும் பங்கேற்காமல், தர்ஷன் ஒதுங்கி விட்டார்.