துணை முதல்வர் சிவகுமார் உத்தரவு பிக்பாஸ் வீட்டுக்கு வைத்த சீல் அகற்றம்
பிடதி: துணை முதல்வர் சிவகுமாரின் உத்தரவை அடுத்து, 'பிக்பாஸ்' வீட்டுக்கு வைக்கப்பட்ட 'சீல்'அகற்றப்பட்டது. கன்னட 'பிக்பாஸ்' 12வது சீசனை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிக்கான 'செட்' பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதி பகுதியில் 'ஜாலிவுட் ஸ்டூடியோ'வில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கர்நடாக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அளித்தது. இதையடுத்து, வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு தனியார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். இதனால், நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சிக்கல் ஏற்பட்டது. 'பிக்பாஸ்' வீடு மீதான நடவடிக்கைக்கு துணை முதல்வர் சிவகுமாரே காரணம் என, ம.ஜ.த., - பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டினர். இதை சிவகுமார் மறுத்தார். அந்த வீட்டின் பிரச்னைகளை சரிசெய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும்படி, மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று அதிகாலை பிக்பாஸ் வீட்டுக்கு வைக்கப்பட்டிருந்த 'சீல்' மாவட்ட ஆட்சியர் யஷ்வந்த் வி.குருகர் முன்னிலையில் அகற்றப்பட்டது. அப்போது, அவர் கூறுகையில், “துணை முதல்வர் சிவகுமார் அறிவுறுத்தலை அடுத்து, 'சீல்' அகற்றப்பட்டது. போட்டியாளர்கள் வீட்டுக்க வரலாம்,” என்றார். * கைது வீட்டுக்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றப்பட்டதை அறிந்த கன்னட அமைப்பினர் 20க்கும் மேற்பட்டோர், காலையிலேயே 'பிக்பாஸ்' வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். 'வீட்டுக்கு மீண்டும் சீல் வைக்க வேண்டும்; நிகழ்ச்சி நடக்கக்கூடாது' என, அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள், 'பிக்பாஸ்' வீட்டின் கதவில் ஏறி, உள்ளே குதித்தனர். இதனால், பிடதி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அனைவருக்கும் நன்றி பிக்பாஸ் வீட்டை திறக்க மீண்டும் வாய்ப்பளித்த துணை முதல்வர் சிவகுமாருக்கு நெஞ்சார்ந்த நன்றி. இதற்கு உறுதுணயாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி. என் கோரிக்கையை ஏற்று சரியான நேரத்தில் உதவி செய்யப்பட்டுள்ளது. விரைவில் நிகழ்ச்சி துவங்கும். கிச்சா சுதீப், நடிகர். இது சரியில்லை! தனக்கான பணிகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் செய்து வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்கு நோட்டீஸ் வழங்கிவிட்டு, அதை சரிசெய்யும்படி மீண்டும் வாய்ப்பு கொடுப்பது சரியல்ல. இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிப்பேன். தற்போது, என்ன நடக்கிறது என்பதை சிவகுமாரிடம் தான் கேட்க வேண்டும். ராமலிங்க ரெட்டி பொறுப்பு அமைச்சர், பெங்களூரு தெற்கு மாவட்டம்