உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கைதிகளுக்கு போதை பரிசோதனை டி.ஜி.பி., அலோக் குமார் அறிவிப்பு

 கைதிகளுக்கு போதை பரிசோதனை டி.ஜி.பி., அலோக் குமார் அறிவிப்பு

பெங்களூரு: ''கர்நாடக சிறைகளில், கைதிகள் கஞ்சா பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. இதைத்தடுக்க கைதிகளுக்கு போதை பரிசோதனை நடத்தப்படும்,'' என, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் தெரிவித்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்ட நாள் முதல், சிறை குறித்த செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன. புகைப்படம் கொலை வழக்கில் சிறையில் இருந்த போது, ரவுடிகளுடன் ஹாயாக டீ குடித்தபடியும், சிகரெட் பிடித்தபடியும், தர்ஷன் இருந்த புகைப்படம் வெளியானது. அத்துடன், பயங்கரவாதிகள், பல கொலை வழக்கில் கைதானவர்கள், மொபைல்போன் பயன்படுத்தும் வீடியோக்கள், மது அருந்தி கொண்டே நடனமாடும் வீடியோ க்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்ததால், அரசுக்கு தர்மசங்கடம் உருவானது. இதையடுத்து, சிறை உயர் அதிகாரி மாற்றப்பட்ட பின், விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. இதனால், கஞ்சா, போதைப்பொருள், சிகரெட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், கோபமடைந்த போதைக்கு அடிமையான கைதிகள், சிறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் போ லீஸ் அதிகாரி கடுமையான எச்சரிக்கை விடுத்த பின்னரே, வாபஸ் பெற்றனர். அதேபோன்று, பெலகாவி, ஹிண்டல்கா சிறைகளில், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பலமுறை நடந்த ரெய்டில், போதைப்பொருட்கள், மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கிடையில், மாநில சிறைத்துறை டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்ட அலோக் குமார், மாநிலத்தின் அனைத்து சிறைகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார். கஞ்சா டீலர்கள் டி.ஜி.பி., அலோக் குமார் நேற்று கூறியதாவது: கர்நாடகா சிறைகளில் உள்ள கைதிகள், பெரும்பாலும் கஞ்சாவுக்கு அடிமையாகி உள்ளனர். இவர்களுக்கு கஞ்சா வினியோகிக்கும் டீலர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். எனவே, அனைத்து சிறைகளிலும் கைதிகளுக்கு, என்.டி.பி.எஸ்., எனும் போதைப்பொருள் தடுப்பு பரிசோதனை நடத்தப்படும். போதைப்பொருள் பயன்படுத்தும் கைதிகள், மொபைல் போன் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறை விதிகளை கைதிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சிறையில் இருந்து வெளியே செல்லும் போது, நல்லவர்களாக இருக்க வேண்டும். அதற்காகவே, இத்தகைய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. கொலை, பாலியல் பலாத்காரம், கொள்ளை, திருட்டு வழக்கில் சிறையில் இருப்போருக்கு, யோகா, தியான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விடுதலையான பின் குற்ற செயலில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைதிகளுக்கு மெக்கானிக், எலக்ட்ரானிக் தொடர்பாக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறையில் இருந்து விடுதலையாகும் போது, இந்த பயிற்சி அவர்களுக்கு புது வாழ்க்கையை தரும். முதன் முறையாக தவறு செய்து விட்டு, சிறைக்கு வரும் கைதிகளை, ஏற்கன வே உள்ளே இருக்கும் கைதிகள் பிளாக்கிற்கு அனுப்பக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி