அவமதிப்பு செயலில் ஈடுபட்டால் பதவி நீக்கம்
பெங்களூரு: ''சட்டசபையின் கண்ணியத்தையும், மரியாதையையும் குறைக்கும் வகையில் மீண்டும் நடந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்யவும் தயங்க மாட்டேன்,'' என சபாநாயகர் காதர் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:சட்டசபையை விட பெரிய அரசியல் அமைப்பு எதுவும் இல்லை. சபாநாயகரை விட வேறு எதுவும் பெரியதும் இல்லை. இது தெரிந்தும், சபாநாயகர் இருக்கை முன் வந்து, மேஜையில் உள்ள மசோதா நகலை பறிக்க முயற்சித்து, மார்ஷல்களை தள்ளி விட்டுள்ளனர். அன்றைய தினம் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். மாற்றம் தேவை
அவர்கள் செய்த தவறுக்கு, சபாநாயகரின் அதிகாரம் என்ன என்பதை அவர்களுக்கு காண்பித்தேன். அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் தேவை என்பதற்காக இந்த முடிவை எடுத்தேன். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் என் நண்பர்கள். அவர்கள் என்ன செய்தனர் என்பதை, அன்று நடந்த சம்பவத்தை நினைத்து பாருங்கள்.முதல் முறை தவறு செய்ததற்காக, மூன்று நாட்கள் சஸ்பெண்ட் செய்தேன். இம்முறை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளேன். வரும் நாட்களில் இதுபோன்று நடந்து கொண்டால், அவர்களை ஓராண்டு சஸ்பெண்ட் செய்வேன் அல்லது அவர்களை பதவி நீக்கம் செய்வேன்.என் முடிவை எதிர்த்து நீதிமன்றத்திலும் அவர்கள் வழக்கு தொடரலாம். விதிமுறை வலிமையாக தான் உள்ளன. அதை எப்படி செயல்படுத்துவது என்பது தான் முக்கியம். அவர்களின் செயல் மாநில மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டவரும் பார்த்துள்ளனர். அன்று நடந்த சம்பவம் கருப்பு தினமாகும். என் முடிவை அனைவரும் வரவேற்றுள்ளனர். மின் விளக்கு
ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் விதான் சவுதா மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும். இதனை முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். எல்.இ.டி., பல்புகள் பயன்படுத்துவதால், மின் கட்டணம் அதிகரிக்காது. தேசிய விடுமுறை நாட்களில், மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனால் 30 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது.விதான் சவுதாவில் 'போட்டோ கேலரி' அமைக்கப்பட்டு உள்ளது. இதில், 1861ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், மைசூரு மாநிலமாக இருந்தபோது, தற்போது உயர் நீதிமன்றம் உள்ள இடத்தில், முதல் சட்டசபை கூட்டம் நடந்த படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வரலாறு பலருக்கு தெரியவில்லை. கமிட்டி அமைப்பு
சட்டசபை கூட்டத்தொடரின் போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காத அதிகாரிகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க, துணை சபாநாயகர் தலைமையில் கமிட்டி அமைத்து உள்ளேன்.எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு, மூன்று மாதங்களுக்குள் அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை என்றால், இக்கமிட்டியிடம் புகார் அளிக்கலாம். அதன்பின், விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.