தீபாவளி பரிசு!
அரசு, தனியார் என, அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, தேசிய அளவில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதை கேரளா, ஒடிசா, பீஹார் ஆகிய மாநில அரசுகள் நிறைவேற்றி உள்ளன. இந்த மாநிலங்களில் அம்மாநில அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. 12 நாட்கள் இதே போன்று, கர்நாடகாவில் பணிபுரியும் பெண்களுக்கும் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன் முக்கியத்துவம் குறித்து, மாநில அரசிடம் தொழிலாளர் நலன்துறை பரிந்துரை செய்தது. இதுகுறித்து விரைவில் அரசு முடிவு எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 'மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025'க்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பு பெண்களுக்கான தீபாவளி பரிசாக மாறி உள்ளது. இதுகுறித்து, மாநில தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது: பல துறைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு குழந்தை வளர்ப்பது, வீட்டில் வேலை செய்வது என பல வேலைகள் உள்ளன. மாதவிடாயின்போது உடல், மன ரீதியாக அவர்களுக்கு அதீத சோர்வு ஏற்படுகிறது. சாதனை இதற்கு சிறிய தீர்வு காணும் விதமாக மாதவிடாயின்போது பெண்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்ய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், கடந்த ஒரு ஆண்டாக விடுமுறை அளிப்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்கி வந்தது. முதலில் ஆண்டுக்கு ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கலாம் என, பரிந்துரை செய்தோம். பிறகு, 12 நாட்கள் விடுமுறை என்று பரிந்துரை செய்தோம். இதற்கு, அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இது நாங்கள் கொண்டு வந்த முற்போக்கான கொள்கை ஆகும். இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையை அவர்களின் மாதவிடாய் சுழற்சியின்படி எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். மாதம் ஒரு முறையோ அல்லது அனைத்து விடுமுறைகளையும் ஒரே முறை கூட எடுத்துக் கொள்ளலாம். மற்ற மாநிலங்களில் மாதவிடாய் விடுமுறைகள் எவ்வாறு செயல்படுகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், நாங்கள் முழுமையாக செயல்படுத்த உறுதியாக உள்ளோம். கர்நாடகாவில் அரசு அலுவலகங்கள், ஆடை தொழிற்சாலைகள், பன்னாட்டு, ஐ.டி., மற்றும் தனியார் என அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பெண்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் நலனுக்காக மாநில அரசு செய்த மிகப்பெரிய சாதனை இது. அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இது குறித்து கட்சி மேலிடம், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முடிவு எடுப்பர். இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட உள்ளது. பெங்களூரில் ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். தவிர பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் புதிய கொள்கை மூலம் ஆண்டுக்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.