வீட்டு பணியாளர்கள் பாதுகாப்பு மசோதா பெலகாவி சட்டசபை கூட்டத்தில் தாக்கல்?
பெங்களூரு: வீட்டுப்பணி செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வார விடுமுறை உட்பட அனைத்து சலுகைகள் கிடைக்க வாய்ப்பளிக்கும் மசோதாவை, வரும் குளிர்கால சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய கர்நாடக அரசு தயாராகிறது. இதுகுறித்து சட்டத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வீட்டு வேலை செய்வோரின் நலனில் அரசு அக்கறை காட்டுகிறது. இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வார விடுமுறை, ஆண்டு விடுமுறை ஓய்வு, ஓ.டி., உட்பட, அனைத்து சலுகைகள் கிடைக்கும் நோக்கில், 'கர்நாடக வீட்டுப் பணியாளர்கள் மசோதா - 2025' கொண்டு வரப்படும். இந்த மசோதா அனைத்து மாநகராட்சிகளுக்கும் பொருந்தும். ஏற்கனவே வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. ஐந்து சதவீதம் இம்மசோதா, பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடக்கும் சட்டசபை குளிர்கால கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம். வீட்டுப் பணியாளர்கள் நலன் ஆணையம், சிறப்பு நிதி அமைப்பது குறித்து, மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நலன் நிதிக்கு வீட்டுப் பணியாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் அல்லது தங்களை பணிக்கு நியமித்த ஏஜென்சிகள் அளிக்கும் ஊதியத்தில், ஐந்து சதவீதத்தை வழங்க வேண்டும். வீட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பு விதிகளின்படி வசூலிக்கப்பட்ட அபராதம், மத்திய, மாநில அரசு வழங்கும் நிதியுதவிகள், வீட்டுப் பணியாளர்கள் ஆணையம், வங்கிகளில் செய்யும் டிபாசிட்களில் இருந்து, கிடைக்கும் வட்டித் தொகை, பணியாட்கள் பதிவு கட்டணமும், பணியாளர்கள் நலன் நிதியில் செலுத்தப்பட வேண்டும். இணையதளம் வீட்டுப் பணியாட்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் அம்சங்களும் இருக்கும். மசோதா கொண்டு வந்த பின், வீட்டுப் பணியாளர்கள் அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும். டிஜிட்டல் இணைய தளம் வழியாக, பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். முறைப்படி பதிவு செய்து கொள்ளாதவர்களை, வீட்டுப் பணிக்கு நியமிக்கக் கூடாது. பதிவு செய்து கொண்டாலும், உரிய இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிப்பதுடன், வீட்டுப் பணியாளர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதாக கருதி, சிறை தண்டனை விதிக்கவும், மசோதாவில் இடம் உள்ளது. வீட்டுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. வரைவு மசோதா தயாரித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய மசோதா, நாட்டிலேயே முதன் முறையாகும். வீட்டுப் பணியாளர்களின் குறைகளை கேட்க, மாவட்ட அளவில் கமிட்டி அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.