| ADDED : நவ 27, 2025 07:34 AM
பெங்களூரு: மின்சார பஸ் ஓட்டுநர்களும் பணியின்போது மொபைல் போன் பயன்படுத்த பி.எம்.டி.சி., நிர்வாகம் தடை விதித்துள்ளது. பெங்களூரில், பி.எம்.டி.சி., பஸ்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாலான பஸ் ஓட்டுநர்கள், பஸ் ஓட்டும்போது மொபைல் போனை பயன்படுத்தியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 'பஸ் ஓட்டுநர்கள் பஸ் ஓட்டும்போது புளூ டூத், இயர்போன்கள் அணிந்தபடி பேசுவது, இசை கேட்பது, குறுந்தகவல் அனுப்புவது உள்ளிட்ட மொபைல் போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, செப்டம்பரில் பி.எம்.டி.சி., உத்தரவிட்டது. இந்த உத்தரவால் ஓரளவு விபத்துகள் குறைந்தன. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் இயக்கப்படும், மின்சார பஸ்கள் விபத்துகளில் சிக்குவது அதிகரித்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், பி.எம்.டி.சி., நிர்வாகம் மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: பி.எம்.டி.சி., மின்சார பஸ்களை ஓட்டும் ஓட்டுநர்களும் பணியின்போது மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. புளூ டூத், இயர்போன்களையும் மாட்டிக்கொண்டு, பாட்டுகளை கேட்கவோ, பேசவோ கூடாது. இந்த விதிகளை மீறுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதிகளை, அனைத்து பணிமனை மேலாளர்களும், ஊழியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.