மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை ஆய்வுக்கு ட்ரோன்
பெங்களூரு: பெங்களூரில் ஏற்படும் மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ட்ரோன்களை பயன்படுத்த பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரில் மழையால் அசம்பாவிதங்கள் நேரிடுகின்றன. இதை தவிர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பற்றி ஆய்வு செய்து, செயல்படுத்த மாநகராட்சி தயாராகிறது.வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்பது, பெரும் சவாலாக உள்ளது. இதற்கு வசதியாக படகு உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.அதே போன்று எந்தெந்த இடத்தில், பாதிப்பு உள்ளது என்பதை கண்டுபிடிக்க, ட்ரோன்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.போலீஸ் துறையுடன் சேர்ந்து, ட்ரோன் பயன்படுத்தப்படும். இதற்காக போலீஸ் துறை மற்றும் மாநகராட்சி சார்பில் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். ட்ரோன் ஆய்வு செய்வதை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்போம்.அசம்பாவிதங்கள் அதிகம் உள்ள இடங்களை அடையாளம் காண, ட்ரோன் உதவியாக இருக்கும்.படகு, ட்ரோன் என, எதை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள். ஆனால் பெங்களூரில் மழை சேதங்களை கட்டுப்படுத்துங்கள் என, அரசின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே தேவையான உபகரணங்கள் வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.